PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM

காங்., முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் பேட்டி: லோக்சபா தேர்தலுக்காக, தி.மு.க.,விடம் தமிழகத்தில், 15 தொகுதிகள் கேட்டு பேச்சு துவங்கியுள்ளது. காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், நான் அந்த தொகுதியை கேட்கத்தான் செய்வேன். மீண்டும் அங்கு போட்டியிட எனக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது.கட்சிக்கு தொகுதி என்பதை விட, 'நாங்க இத்தனை பேர்; எங்களுக்கு இந்தந்த தொகுதிகளை ஒதுக்கிடுங்க'ன்னு தானே தமிழக காங்., நிர்வாகிகள் கேட்கறாங்க... நீங்க அந்த பட்டியலில் இல்லையா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் போரில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது; அதற்கான முழு முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இனி, அரசு கொள்முதல் செய்யக்கூடிய பஸ்கள், மற்ற வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்களாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.சென்னைக்கு, 500 மின்சார பஸ்கள் வாங்குறதா சொன்னாங்க... பூத கண்ணாடி வச்சு தேடி பார்த்தாலும் அதை எல்லாம் காணோமே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: ராமேஸ்வரத்தை சேர்ந்த, 23 மீனவர்கள் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, 19 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் கைதின் போது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழக மீனவர்களின் கைதை தடுக்க ஆக்கப்பூர்வமாக எடுத்த நடவடிக்கை என்ன?கடிதம் எழுதுறதை தவிர ஆக்கப்பூர்வ நடவடிக்கை வேற ஏதும் இருந்தால், அது என்னான்னு இவரே சொல்லலாமே!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: சென்னையில் நான்கு தனியார் பள்ளிகளுக்கு, 'இ - மெயில்' வழியே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்கம் போல் சைபர் கிரைம் போலீசார் மந்தமாக வேலை பார்க்காமல், மெயில் அனுப்பிய நபரை துரிதமாக கண்டுபிடித்து, தண்டனை வாங்கி தர வேண்டும்.இணைய வழி கிரிமினல்களுக்கு மேலாக இல்லா விட்டாலும், இணையாகவாவது தொழில்நுட்ப விபரங்களில் போலீசார், ‛அப்டேட்' ஆனா தான் நீங்க சொல்றதெல்லாம் நடக்கும்!

