PUBLISHED ON : ஜன 14, 2024 12:00 AM

அ.தி.மு.க.,வை சேர்ந்த, சுகாதார துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை: சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டில், நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலை, நோயாளியின் உடன் வந்தவர்களே துாக்கி சுமக்கின்ற காட்சியும், மறுபுறம் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு, தண்ணீர் வாளியை வைத்து முட்டுக் கொடுத்த கொடுமையும், அதிர்ச்சி அளிக்கிறது.நல்லவேளை, காயத்துக்கு எச்சில் தொட்டு பேப்பர் ஒட்டாம விட்டாங்களே என்று சந்தோஷப்படுங்க!
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை: ராமர் பிறந்த அயோத்தியில், அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது, 100 கோடிக்கும் அதிகமான மக்களின் பல நுாற்றாண்டு கனவு. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும் விழாவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் உண்மையான தலைமைக்கு இருக்கும் ஹிந்து மத வெறுப்பை அனைவரும் அறிவர். காங்கிரசின் உண்மை முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.'மத்தியில் ஆட்சியை பிடிச்சிட்டு தான் ராமர் கோவில் வாசலில் கால் வைப்போம்'னு சபதம் எடுத்துட்டாங்களோ என்னமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி: பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து விட்டது. பழனிசாமியுடன் தே.மு.தி.க., - பா.ம.க.,வினர் கூட்டணி இல்லை என, கூறிவிட்டனர். அவர் குடும்பத்துடன் மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் தனி மரமாக உள்ளார்.அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், 90 சதவீதம் கட்சியினர் பழனிசாமி யோடு தானே இருக்காங்க... அப்புறம் எப்படி அவர் தனி மரமாவார்?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: முன்னாள் பிரத மரை கொன்ற குற்றவாளியை ஆரத்தழுவி வரவேற்றவர்கள்; பண மோசடி வழக்கில் எட்டு மாதங்களாக சிறையில் இருப்பவரை அமைச்சராக நீட்டித்து, மக்களை முட்டாள்களாக கருதுவோர்; குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரை, தன் வீட்டிற்கே வரவழைத்து, நீதியை மிதித்தவர்கள், போலி குற்றச்சாட்டில் முறையற்ற வழக்குகளை பதிந்து கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள துணைவேந்தரை, பணி நிமித்தம் கவர்னர் சந்தித்ததை விமர்சனம்செய்வது வெட்கக்கேடு மட்டுமல்ல, அருகதையற்ற செயலும் கூட.'உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளி சட்னி' என்ற கதை தி.மு.க.,வினருக்கு தானே பொருந்தும்!
மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: மதுரையில், துணை மேயர் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதல். அரசியல் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது, மதுரை போலீசாரின் செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. இங்கு சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. போலீசுக்கும் தொடர்பு உள்ளதா என, சந்தேகம் ஏற்படுகிறது. இதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.ஆளுங்கட்சிக்கு எதிரா மூச்சு விடக்கூட பலமுறை யோசிக்கும் தோழர்கள், திடீரென போராட வீதிக்கு வர்றாங்களே... அணி மாறும் எண்ணமா?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'கருணாநிதி பேரனான எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் மருத்துவர்களை தான் கடவுளாக பார்க்கிறேன்' என்று, அமைச்சர்உதயநிதி கூறியுள்ளார். அமைச்சர் எங்களை பெருமையாக குறிப்பிட்டாலும், இந்த ஆட்சி அமைந்தது முதல் அரசு மருத்துவர்கள் ஏமாற்றத்தையும், வேதனையையும் மட்டுமே அனுபவித்து வருகின்றனர் என்பது தான் உண்மை.டாக்டர்களை தெய்வமாக பார்த்தால் மட்டும் போதுமா... அப்பப்ப சம்பள உயர்வு எனும் காணிக்கையும் கொடுத்தால் தானே சரியா இருக்கும்!
அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி பேட்டி: அ.தி.மு.க., வில், லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. மூத்த நிர்வாகிகள் வாயிலாக, யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ந்த பின், வேட்பாளர் விபரம் இறுதி செய்யப்படும்.'துணிந்தவனுக்கு துாக்கு மேடையும் பஞ்சு மெத்தைங்கிறதை மனசுல வச்சிக்கிட்டு, 40 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவிச்சு, எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுக்கலாமே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பயிர்களை முழுமையாக கணக்கிட்டு, அதற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு பயிர்களுக்கான இழப்பீட்டையும் விரைந்து பெற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், விளை நிலங்களில் தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்றும் செயல் திட்டத்தை, தமிழக அரசு வழங்க வேண்டும்.டெல்டாகாரரான இவரே, பயிர்கள் வளர்ந்த பின் மழை பெய்து வயலில் நீர் தேங்கினால், உடனே வெளியேற்ற அரசுக்கு ஏதாவது சிறப்பு யோசனையை தெரிவிக்கலாமே!

