PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈஸ்வரன் பேச்சு: கரூர்
மாவட்டத்தில் நலிவடைந்து வரும் ஜவுளி தொழிலை பாதுகாக்க பா.ஜ., மாநில
தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும். போகும் இடமெல்லாம்
எதிர்க்கட்சிகள் மீது குறை கூறுவதை விட்டு, ஆக்கபூர்வமான விஷயங்களை செய்ய
முன்வர வேண்டும்.
இப்படி ஏதாச்சும் பேசினா தான், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் ஒரு சீட்டாச்சும் தேறும்னு நினைக்கிறாரோ?
ஈரோடு போலீஸ் எஸ்.பி., ஜவஹர் பேச்சு: லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள போது, நகைகளை கொண்டு சென்றால், ஆவணங்கள் முறையாக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் அந்த நகைகளை அவ்வளவு எளிதில் பெற முடியாது. நகைகளைஎங்கிருந்து, எங்கு, எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும்.
இது என்ன புதுசா...? ஒவ்வொரு எலக் ஷனுக்கும் அப்பாவிகளின் பணம், நகைகளை பறித்து, தேர்தல் கமிஷனில் கணக்கு காட்டுறது நடந்துட்டு தானே இருக்கு!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி: மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று. இதில், தி.மு.க.,வுடன் ரகசிய கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும், முதல்வரும் கலந்து கொள்வது இயல்பு தான். அதை கூட்டணி என பார்க்க முடியாது.
'இண்டியா' கூட்டணியில் பிரதமர், துணை பிரதமர் பதவியை குறி வச்சிருக்கும் தி.மு.க., எப்படி பா.ஜ.,வோடு சேரும்?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் இருந்து சொத்து ஆவணங்களின் நகல்களை யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி பெறலாம் என, பத்திரப்பதிவு துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போலி ஆவணங்களை தயாரித்து சொத்துகளை அபகரிக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், சொத்து ஆவணங்களை நிபந்தனையின்றி வழங்குவது மோசடிகள் அதிகரிக்கவே வழிவகுக்கும்.
மோசடிக்கு எப்படி எல்லாம் வழி ஏற்படுத்தி தர முடியும்னு அரசு துறைகளில் ஒரு போட்டி வச்சா, பத்திரப்பதிவு துறைக்கு தான் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கிடைக்கும்!

