PUBLISHED ON : ஜன 24, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
தி.மு.க.,வை
சார்ந்து பிழைக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள்
இன்றும் அவர்களோடு தான் நிற்கின்றனர். அ.தி.மு.க.,வை நம்பி கடை நடத்திய
த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி போன்றவை, இப்போது பா.ஜ.,வை
பின்பற்றும் கட்சிகளாக மாறி இருக்கின்றன. இதனால் காலப்போக்கில் தமிழக
அரசியல், தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையிலான, அரசியல் களமாக மாறி
விடக்கூடும்.
எல்லாரும் யார் யார் பின்னாடியாவது நிற்கிறாங்க... இவரது தலைவர் பன்னீர்செல்வம் தான், தனி மரமா நின்னுட்டு இருக்கார்!
தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் முன், 'கள்' மீதான தடையை, தமிழக அரசு நீக்கும் என, எதிர்பார்க்கிறோம். இல்லா விட்டால் தமிழகத்தில், 39 தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழப்பர்.
லோக்சபா தேர்தலில் எப்படியும் தி.மு.க., தோற்கும்... 'எங்களால தான் இந்த தோல்வி' என நாளைக்கு பெருமை அடிச்சுக்கலாம்னு நினைக்கிறாரோ?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: லோக்சபா தேர்தலையொட்டி, தொகுதி உடன்பாடு குறித்து பேச, ம.தி.மு.க.,வில் குழு அமைத்திருப்பது செம காமெடி. பெறப் போவது ஒரு தொகுதி; அந்த வேட்பாளரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போகிறார். வெற்றி பெற்றால், தான் தி.மு.க., உறுப்பினர் என, நீதிமன்றத்தில் எழுதி கொடுத்து விடுவார். இதில் கூட்டணி பேச்சு, குழு அமைப்பு என்ற, 'பில்டப்' எல்லாம் தமாசு.
அட, அந்த கட்சியில இருக்கிற நிர்வாகிகளுக்கும் ஏதாவது வேலை தர வேண்டாமா?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், மக்கள் பலர் வசிக்க வீடு இல்லாமல் தவிக்கும் நிலையில், 1,000 ட்ரோன்கள் வைத்து, வானில் உருவங்களை தி.மு.க., காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை முதல்வர் குடும்பம் களிப்புடன் கண்டு மகிழ்கிறது. இதற்கு செய்த செலவை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய மனம் வரவில்லை.
மக்களிடம் இருந்து தான் கட்சிக்கு நிதி வசூல் பண்ணுவாங்களே தவிர, கட்சி பணத்தை எடுத்து மக்களுக்கு தருவாங்களா என்ன?

