PUBLISHED ON : ஜூலை 07, 2026 12:00 AM

அ.தி.மு.க., அமைப்பு செயலர் ராயபுரம் மனோ அறிக்கை:
நடக்காத ஒன்றை கற்பனை கதையாக திரித்து, தி.மு.க., தயவால் ஆட்சி அமைக்க முயற்சித்ததாக எங்கள் கட்சி பொதுச் செயலர் பழனிசாமி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சிலர் சுயநலத்துக்காக சுமத்தி வருகின்றனர். அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் அவர்களுக்கு, எங்கள் கட்சியின் உண்மை தொண்டர்கள் தகுந்த பாடம் கற்பிப்பர்.
சீக்கிரமே ஏழு தொகுதிகளில் நடக்க உள்ள இடைத்தேர்தலில், த.வெ.க.,வை இவரது கட்சி வீழ்த்தி பாடம் கற்று கொடுத்துடுமா?
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி., பேட்டி:
அ.தி.மு.க., -- எம். எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தபோது, குதிரை பேரம் என்று கூறினர். ஆனால், இன்று எங்கள் எம்.எல்.ஏ.,க்களை, 'கன்டெய்னர் மாடல்' கட்சியிடம் இழந்துள்ளோம். எங்களை வற்புறுத்தி தி.மு.க., சின்னத்தில் நிற்க வைத்து, தற்போது எங்கள் எம்.எல்.ஏ.,க்களை தி.மு.க.,வில் சேர்க்கும் நிலைக்கு போய்விட்டனர். இது குதிரை பேரமா, கழுதை பேரமா, ஒட்டக பேரமா என தெரியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் குட்டிச்சுவராக போனதற்கு யார் காரணம் என எல்லாருக்கும் தெரியும்.
அந்த 30 வருடங்களில் இரண்டு திராவிட கட்சிகளுடன் நீங்க மாறி மாறி கூட்டணி வைத்ததால், தமிழகம் குட்டிச்சுவரா போனதில் உங்க கட்சிக்கும் பங்கிருக்கே!
அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி:
அ.தி.மு.க.,வில் இருந்து மாற்று கட்சிக்கு சிலர் சென்றுள்ளனர். 'எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் நுாற்றாண்டு வரை இருக்கும்' என, ஜெயலலிதா சொன்னது நடக்கும். எம்.ஜி.ஆருக்காக கையில் பச்சை குத்தியுள்ளதால் நான் எங்கும் செல்ல மாட்டேன். அ.தி.மு.க., வின் கடைசி தொண்டனாக கூட இருப்பேன்.
அ.தி.மு.க., சின்னத்தை தன் கையில் பச்சை குத்திட்டதால, த.வெ.க.,வுக்கு போனா தர்மசங்கடமா இருக்கும்னு நினைக்கிறாரோ?
பா.ஜ., தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
வைகை ஆற்றை பார்த்த தமிழக கவர்னர் அர்லேக்கர் அதிர்ச்சி அடைந்து, 'ஆறு இருக்கிறது; நீர் எங்கே' என கேட்டு, தேசப்பற்றுடன் அதை மீட்டெடுக்குமாறு மதுரை இளைஞர்களிடம் வலியுறுத்தியுள்ளார். யாரும் முன்வராவிட்டால் கவர்னர் அலுவலகமே களமிறங்கும் என, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இது சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த மிக முக்கியமான வரவேற்கத்தக்க நடவடிக்கை.
கோவா மாநிலத்தை சேர்ந்த கவர்னருக்கு மதுரை வைகை ஆற்றின் மீது இருக்கும் அக்கறை, நம்ம மண்ணின் மைந்தர்களுக்கு இல்லாமல் போயிடுச்சே!
