PUBLISHED ON : ஜூலை 23, 2026 01:36 AM

தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி: பழனி கோவில் நில விவகாரம் குறித்த விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இதற்கு முன்பிருந்த, தி.மு.க., ஆட்சியில் ஊழல் புரையோடி இருந்த பத்திரப்பதிவு துறையை, த.வெ.க., ஆட்சியில் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். இன்னும் நிறைய புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரப்பதிவு துறை மோசடிகளை விசாரிக்கவே, போலீசில் தனிப்பிரிவு துவங்கணும் போலிருக்கே!
த.வெ.க., பிரமுகரும், முதன்மை கப்பல் பொறியாளருமான சிங்காரவேலன் பேட்டி: தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் வாயிலாக, 2 கோடி பேர் துவரம் பருப்பு வாங்குகின்றனர். மாதம், 20,000 டன் அதாவது, 2 கோடி கிலோ பருப்பு வாங்க வேண்டும். பருப்பு கொள்முதலில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியில், கட்சி நிதிக்காக பல கோடி ரூபாய் கமிஷன் பெறப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் வாங்கியதை விட குறைந்த விலையில் பருப்பு வாங்கி, த.வெ.க., அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது.
பருப்பு கொள்முதலில் நடந்த ஊழல்களை தோண்டி துருவினால், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சக்கரபாணிக்கு சிக்கல் தான்!
சென்னை, எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரியின் முதல்வர் லதா ராஜேந்திரன் பேச்சு: பேச்சு திறன் குறைவு மற்றும் காது கேளாதோரின் மறுவாழ்விற்காக, தன் சொத்துக்களை எழுதிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர்., மட்டுமே. அவரது பெயரில் சிறப்பு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், செவித்திறன் குறையுடைய மாணவர்களில் இருந்து, சிறப்பு ஆசிரியர்களை உருவாக்கி வருகிறோம். இவர்கள் துபாய், கத்தார், மாலத்தீவு போன்ற வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில், சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற பாடலுக்கு உதாரணம், எம்.ஜி.ஆர்., மட்டுமே!
வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேச்சு:
வட மாநிலங்களில் திராவிடம் என்றாலே, அது தமிழ் என்று தான் பொருள். அப்படி இருக்க, நாம் எப்படி திராவிடத்தை எதிர்க்க முடியும்? திராவிடத்தை எதிர்ப்பவர்கள், தங்களை தமிழ் தேசியவாதிகளாக அடையாளப்படுத்தி கொள்கின்றனர். அவர்கள் தமிழ் தேசியத்தை, வட மாநில ஆதிக்கத்திற்கும், ஹிந்துத்வாவுக்கும் எதிராக நிறுத்தாமல், தெலுங்கர்களுக்கு எதிராக நிறுத்துகின்றனர். குறிப்பாக, கருணாநிதி எதிர்ப்பில் கொண்டு போய் நிறுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாக, தி.மு.க., எதிர்ப்பில் தமிழ் தேசியத்தை முடக்கி விட்டனர்.
தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறினாலும், அந்த கட்சி மீதான இவரது பற்றும், பாசமும் கொஞ்சம் கூட போகலையே!
