PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
அதிகாரம் இல்லாவிட்டால் என்ன? அதிக காரம் உள்ள சுய மரியாதை இயக்கம் தி.மு.க., என்பதை, உதயநிதி மீதான கைது முயற்சியாலும், சென்னைக்கும், செங்கிப்பட்டிக்குமான காவல்துறை பாதுகாப்போடு இணைந்த அணிவகுப்பாலும், தொண்டர்களின் பேரெழுச்சியாலும், உலகுக்கே எடுத்துக் காட்டியிருக்கிறது, மதி கெட்ட மக்கு த.வெ.க., அரசு.
'இவ்வளவு களேபரத்துக்குக் காரணமான உதயநிதி, அப்படி என்ன தான் பேசிட்டார்'னு, எல்லாரும் சமூக வலைதளங்கள்ல தேடித் தேடிப் பார்த்து, அவரை வசைபாடுவது இவருக்கு தெரியாதோ?
பா.ஜ., தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தமிழக அரசின் பட்ஜெட், கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொருளாதார தொலைநோக்குப் பார்வையை தொலைத்து விட்டது. புதிய பெயரிலான இலவசத் திட்டங்களில், கடந்த தி.மு.க., ஆட்சியின் தொடர்ச்சியை காண்கிறோம். பள்ளிக்கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைந்த நிலையில், கவர்ச்சிகரமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட், அடிப்படை சோதனையில் தோல்வி அடைந்துள்ளது.
மத்திய பா.ஜ., அரசு மனது வைத்தால், தமிழக அரசுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்து உதவலாமே!
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு:
தமிழக அணைகளின் நீர்மட்டம், 53 சதவீதம் குறைந்து விட்டது. அரிசி விலை, 30 நாட்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதில் காட்டிய வேகத்தை, மற்ற பிரச்னைகளிலும் முதல்வர் விஜய் காட்டுவாரா?
என்னமோ, முதல்வர் விஜயே காக்கி சீருடை அணிந்து போய் உதயநிதியை கைது பண்ணியது மாதிரி பேசுறீங்களே!
ஹிந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது, கையில் ஜெபமாலையுடன் வந்தார். முன்னதாக வேளாண் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து வழிபட்டார். அதற்கு எம்.பி., வெங்கடேசன், வீரபாண்டியன் உள்ளிட்ட கம்யூ., கட்சியினர், 'அரசு ஆவணத்தை கோவிலுக்கு கொண்டு செல்வது மதச்சார்பின்மைக்கு எதிரானது' என விமர்சித்தனர்.
'திருப்பதி கோவிலுக்கு சென்றது தவறு' என கூறுவோர், ஜெபமாலையுடன் அரசு நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றதையும் விமர்சிக்க வேண்டும். மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பதே தவிர, ஒரு மதத்திற்கு ஒரு விதி, மற்றொரு மதத்திற்கு வேறு விதி என்பதல்ல.
வாஸ்தவம் தான்... 'ஒரு கண்ணில் வெண்ணெய்; மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு' என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான்!
