/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
விமர்சனங்கள் பற்றி நாங்கள் வருந்துவதில்லை!
/
விமர்சனங்கள் பற்றி நாங்கள் வருந்துவதில்லை!
PUBLISHED ON : அக் 21, 2025 12:00 AM

தர்மபுரி மாவட்டம், குமாரம்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி: எனக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். திருமணம் ஆனதும், தர்ம புரியில் வாழ்க்கையை ஆரம்பித்தேன்.
சிறு வயதிலேயே, 'போலியோ' பாதிப்பு வந்து விட்டது. இதனால், சிறு வயதில், இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லையே என்று ஏக்கம் இருந்தது; ஆனால், பெரியவளாகி, சம்பாதிக்க ஆரம்பித்த பின், அந்த எண்ணம் போய் விட்டது.
ஸ்ரீ சக்தி சிறப்பு மகளிர் குழுவை ஆரம்பித்தேன். அந்த குழுவில் ஐந்து பேர் மாற்றுத்திறனாளிகள்; ஐந்து பேர் கணவரை இழந்தவர்கள். சிறப்பு மகளிர் குழு என்பதால், குறைவான வட்டியில் கடன் கிடைத்தது.
அதில், ஆளுக்கொரு வியாபாரம் ஆரம்பித்தோம். வேறு வேறு தொழிலாக இருந்தாலும், பொருள் வாங்குவது, 'பேக்கிங்' செய்வது, எடை போடுவது, விற்பனை செய்வது என, 10 பேரும் இணைந்து வேலை செய்கிறோம்.
எங்களை பார்த்து, பலரும் கிண்டல் செய்வர். ஆனால், எல்லா விமர்சனங்களையும் சவாலாக எடுத்து, 'ஜெயித்தே ஆக வேண்டும்' என, தீர்மானமாக இருக்கிறோம்.
வீடு தான், எங்கள் தொழிற்கூடம். எங்களின் வருமானத்தில் தான் எல்லாரின் குடும்பங்களும் நடக்கின்றன. பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்.
ஒவ்வொருவரும், மாதம், 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். எங்கள் வாழ்க்கை மட்டும் மாறினால் போதாது. சமூகமும் மாற வேண்டும் என்பதற்காகவே, சமூகம் சார்ந்து ஏதேனும் செய்யலாம் என்று யோசித்தோம்.
கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில், '100 சதவீதம் ஓட்டுப்பதிவு' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். சாலைகளின் ஓரங்கள், பூங்காக்கள் என பல இடங்களிலும், இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட செடிகளை நட்டு பராமரிக்கிறோம்.
எங்கள் பகுதியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வழங்கும் சலுகைகளை வாங்கி தருகிறோம்.
மாற்றுத்திறனாளிகளான நாங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிய போது, யாரும் எங்களுக்கு உதவிக்கு வரவில்லை. ஆனால், ஜெயித்த பின், பலரும் கை கொடுக்கின்றனர். ஜெயிப்பதற்கு முயற்சியும், உழைப்பும் நிச்சயம் அவசியம்!

