/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பிழைக்க வழியிருக்கும் போது உழைக்க தயாராக இருக்கணும்!
/
பிழைக்க வழியிருக்கும் போது உழைக்க தயாராக இருக்கணும்!
பிழைக்க வழியிருக்கும் போது உழைக்க தயாராக இருக்கணும்!
பிழைக்க வழியிருக்கும் போது உழைக்க தயாராக இருக்கணும்!
PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

'சாய் ஸ்ரீ ஜூட் பேக் வொர்க்கர்ஸ்' என்ற பெயரில், சணல் பைகள் தயாரிப்பில் ஈடுபடும் தஞ்சாவூர், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி:
கல்லுாரி காலத்தில் டெய்லரிங், பியூட்டிஷியன் கோர்ஸ்கள் கற்று கொண்ட நான், அவை இரண்டையும் தொழிலாக முன்னெடுக்க நினைத்தேன். கணவரும் ஆதரவு தந்தார். இங்குள்ள தொல்காப்பியர் சதுக்கம் அருகில் பேன்ஸி ஸ்டோர், பியூட்டி பார்லர் என, இரண்டு கடைகளை துவங்கினேன்.
கணவருடன் சென்னை, பெங்களூரு என சென்று பொருட்கள் வாங்கி வந்தேன்.
சுடிதார், பிளவுஸ் உள்ளிட்ட மெட்டீரியல்கள், பேன்ஸி பொருட்கள் என விற்பனை செய்ததுடன், பிளவுஸ் தைத்தும் கொடுத்தேன். துணியை கொடுத்தால் அரை மணி நேரத்தில் ஜாக்கெட் தயாராகிவிடும் என்பது எனக்கான விளம்பரமாக அமைந்தது. 2003 - 2009 வரை காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடினேன்.
கை நிறைய சம்பாதித்த பணத்தில் நகைகள், பொருட்கள் என சேர்த்தேன்.
அப்போது, திடீரென என் கணவர் வாதத்தால் படுத்த படுக்கையானார். தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். சேமிப்பு பணம் போதாமல், கையிலிருந்த 100 சவரன் நகையுடன், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
பேன்ஸி ஸ்டோர், பார்லரை மூடிவிட்டு டெய்லரிங் யூனிட்டில் மட்டும் கவனம் செலுத்தினேன். அப்போதுதான், 'ஜூட் பேக்' எனும் சணல் பைகள் பக்கம் என் கவனம் திரும்பியது. கும்பகோணத்தில், சணல் பை செய்வதற்கான மூன்று மாத பயிற்சியில் பங்கேற்றேன். ஆரம்பத்தில் ஆறு பெண்களுக்கு வேலை கொடுத்தேன்.
எங்கள் பையின் தோற்றமும், தரமும், 'ஆன்டைம்' டெலிவரியும் வியாபாரத்தை விரிவுபடுத்தின. சணல் பைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது; லாபமும் அதிகமாக கிடைத்தது. சீக்கிரமே, 13 தையல் மிஷின்களுடன் யூனிட்டை விரிவுபடுத்தினேன்.
நஷ்டத்தை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் ஆர்டர் தரும்போதே முன்பணம் வாங்கினேன். தாம்பூல பை, லேப்டாப் பை, டிராவல் பை, பர்ஸ், பவுச் என, சணல் பையில் பல வெரைட்டிகள் தயாரிக்கிறேன்.
தற்போது என்னிடம், 20க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். எல்லா செலவும் போக, மாதம் 80,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். இதற்கிடையில் கணவரின் மரணம், இரு மகன்களை படிக்க வைத்து கரையேற்றியது என, அனைத்தையும் கடந்தேன்.
மகளிர் திட்டம் வாயிலாக, 40 பேட்ச்களாக 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சணல் பை தயாரிப்பு பயிற்சி வழங்கி இருக்கிறேன். அந்த பெண்களிடம் நான் கூறியது... பிழைக்க வழி இருக்கு; உழைக்க தயாராக இருக்கணும் என்பது தான்!
தொடர்புக்கு:
99940 89149