ADDED : ஜூன் 26, 2025 11:06 AM

வடிகால்வாய் பணி மந்தம் நீலாங்கரையில் சேறான சாலை
சோழிங்கநல்லுார் மண்டலம், 192வது வார்டு, நீலாங்கரை, கஜுரா கார்டன், 1 மற்றும் 2வது பிரதான சாலை, 30 அடி அகலம் கொண்டது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த சாலையில், இரண்டு மாதத்திற்கு முன், மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி துவங்கியது. ஆனால், மந்த கதியில் வேலை நடக்கிறது. துவங்கிய போது நடந்த அதே வேகத்தில் பணி செய்திருந்தால், கடந்த மாதமே வடிகால்வாய் கட்டி முடிக்கப்பட்டிருக்கும்.
பள்ளம் தோண்டிய மண்ணை சாலை முழுதும் பரவி விட்டுள்ளனர். அதனால், லேசான மழைக்கே சாலை சேறும், சகதியுமாக மாறியதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
குழந்தைகள், வயதானவர்கள் சகதியில் சறுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வடிகால்வாய் பணியையும் வேகப்படுத்தவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, பணியை விரைந்து முடித்து, சாலையை சரி செய்ய வேண்டும்.