/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.1.50 கோடி நிலத்தை அபகரித்த பா.ஜ., புள்ளிகள்!
/
ரூ.1.50 கோடி நிலத்தை அபகரித்த பா.ஜ., புள்ளிகள்!
PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''டாக்டர்களை திட்டியிருக்காங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இருக்கு... சமீபத்துல, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் டிரைவர் ஒருத்தர் அங்க இறந்து போயிட்டாரு பா...
''அவரது உடலை வாங்க செங்கோட்டையன், பெருந்துறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயகுமார் எல்லாம் போயிருந்தாங்க... அங்க இருந்த டீன் உள்ளிட்ட மூத்த டாக்டர்களிடம் பேசிட்டு இருந்தாங்க பா...
''அப்ப டாக்டர்கள், 'இந்த மார்ச்சுவரியில நாலு உடல்களை மட்டும் வைக்கத் தான் பிரீசர் பாக்ஸ் இருக்கு... 12 உடல்களை வைக்கிற நவீன பிரீசர் வாங்க, 30 லட்சம் ரூபாய் தேவை... அரசு நிதி ஒதுக்காம சிரமமா இருக்கு'ன்னு பேச்சுவாக்குல சொல்லியிருக்காங்க பா...
''உடனே, செங்கோட்டையன் உள்ளிட்ட அ.தி.மு.க., பிரமுகர்கள், அங்க இருந்தபடியே நாலஞ்சு ஸ்பான்சர்களுக்கு போன் போட்டு, 'செக்' தர சொல்லி, தாங்களும் கொஞ்சம் தொகை குடுத்து, 'நவீன பிரீசரை வாங்கிடுங்க'ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க...
''இது, மாவட்ட அமைச்சர் முத்துசாமி, மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் தோப்பு வெங்கடாசலம் காதுக்கு போகவும், 'எங்ககிட்ட சொல்லி யிருந்தா வாங்கி தந்திருப்போமே... அ.தி.மு.க.,வினரிடம் ஏன் கேட்டு வாங்குனீங்க'ன்னு டாக்டர்களை சத்தம் போட்டி ருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''நடிகர் மகளுக்கு வாய்ப்பு தரணும்னு உத்தரவு போட்டிருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா, சமீபத்துல தி.மு.க.,வுல சேர்ந்திருக்காங்களே... 'அதிக கூட்டங்கள் ஏற்பாடு செய்து, திவ்யாவை பேச வைக்கணும்'னு மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு போட்டிருக்கு ஓய்...
''ஏற்கனவே, தி.மு.க.,வுக்கு ஆதரவா சமூக வலைதளங்கள்ல பதிவுகள் போடும், தி.க.,வை சேர்ந்த மதிவதனிக்கும் நிறைய கூட்டங்கள்ல பேச வாய்ப்பு தரணும்னு தி.மு.க., தலைமை உத்தரவு போட்டிருக்கு...
''இப்ப, 'திவ்யாவுக்கும் தனியா கூட்டங்கள் நடத்துங்க'ன்னு உத்தரவு வந்திருக்கிறதால, மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நில மோசடி புகார் வந்திருக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யார் மேல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 'சாப்ட்வேர் இன்ஜினியர்' தாமஸ் கிங்ஸ்டன்... இவருக்கு சொந்தமான 30 சென்ட் நிலம், துாத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்துல இருந்துச்சு வே...
''இந்த நிலத்தை வித்து தரும்படி பா.ஜ., மாவட்ட நிர்வாகியை அணுகியிருக்காரு... அவரும், தன் பெயருக்கு 15 சென்ட், தன் நண்பர் பெயருக்கு 15 சென்ட்னு பவர் பத்திரம் வாங்கிட்டு, தன் கட்சியில இருக்கிற, 'மாஜி' பெண் எம்.பி.,க்கு கிரயம் பண்ணி குடுத்துட்டாரு வே...
''தனக்கு தெரியாம நிலத்தை வித்துட்டதை கேள்விப்பட்ட தாமஸ், பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகி தடங்கல் மனு கொடுத்து ரசீது வாங்கியிருக்காரு...
''அதுவும் இல்லாம, 'பா.ஜ.,வினர் கூட்டு சதி செய்து, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள என் நிலத்தை மோசடி பண்ணிட்டாங்க'ன்னு எஸ்.பி.,யிடம் புகாரும் குடுத்திருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சசிகலா மேடம்... லோகத்துல சத்தியசீலனா யாருமே இருக்க மாட்டேங்கறாளே...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.