/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அமைச்சர் மீது ஊழியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி!
/
அமைச்சர் மீது ஊழியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி!
PUBLISHED ON : ஜன 24, 2024 12:00 AM

''தமிழகத்துக்கு பெரும் நஷ்டம் பா...'' என்றபடியே, மேட்டரை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சமீபத்துல, சென்னையில உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துச்சே... இதுல, 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாச்சு பா...
''இதுல, மருந்து துறையில வெறும், 700 கோடி ரூபாய்க்கு தான் முதலீடு வந்திருக்கு... மத்த மாநிலங்கள்ல அதிகபட்சமா ஐ.டி., மற்றும் மருந்து துறையில தான் அதிகமான முதலீடுகள் வந்திருக்குது பா...
''நம்ம ஊர்லயும் குறைந்தபட்சம், 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வர்றதுக்கு வாய்ப்பு இருந்துச்சாம்... ஆனா, துறையில நடக்கிற சில குளறுபடிகள் அதை கெடுத்துடுச்சு பா...
''அதாவது, துறை அமைச்சர் வெளிநாடு போயிருந்தப்ப, தனக்கு தெரியாம பதவி உயர்வு வாங்கிட்டதா ஒரு அதிகாரியை பதவியிறக்கம் பண்ணிட்டு, அந்த பதவிக்கு சற்றும் தகுதியில்லாத அதிகாரியை நியமிச்சிட்டாரு... அவரால, தெளிவா எந்த முடிவும் எடுக்க முடியல பா...
''இது அமைச்சருக்கும் தெரிஞ்சாலும், தன் தப்பை ஒப்புக்குவாரா... அதனால, அதிகாரி குறித்து யாரும் சுட்டிக்காட்டினாலும், அவங்க மேல எரிஞ்சு விழுறாரு... இந்த மாதிரி சிக்கல்களால தான், மருந்து துறையில பெரிய அளவுல முதலீடு பண்ண யாரும் வரல பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆவின் ஊழியர்கள் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 46 சதவீத அகவிலைப்படி கொடுத்தாளோல்லியோ... ஆவின் பணியாளர்களுக்கு மட்டும் இன்னும் வழங்கல ஓய்...
''போன வருஷம் நவம்பர் மாசமே, 'ஆவின் ஊழியர்களுக்கு நிலுவை தொகையுடன் அகவிலைப்படி உயர்வு வழங்குவோம்'னு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வாக்குறுதி தந்தார்... ஆனா, இதுவரைக்கும் அதை அவர் நிறைவேற்றல ஓய்...
''இதனால, 'ஆவின் நஷ்டத்தை ஈடுகட்ட அரசு மானியம் வழங்கணும்... அப்ப தான் எங்களுக்கான சலுகைகள் கிடைக்கும்'னு ஊழியர்கள் கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்டயும் அரசு ஊழியர்கள் சங்கதி ஒண்ணு இருக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தலைமை செயலக சங்க நிர்வாகிகள் சமீபத்துல, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை பார்த்து பேசினாவ... அப்ப, பல கோரிக்கைகளை வலியுறுத்தினாவ வே...
''அதுவும் இல்லாம, 'பல்வேறு கோரிக்கைகள் தொடர்பா, மனிதவள மேலாண்மை துறை செயலரை அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கிறதால, அத்துறைக்கு தனியா ஒரு செயலரை நியமிக்கணும்'னு கோரிக்கை வச்சாவ...
அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதா உறுதி தந்தாரு வே...
''ஆனா, ரெண்டு நாள் கழிச்சு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரை இடமாறுதல் செஞ்சாங்கல்லா... அதுல, பொதுத்துறை செயலர் நந்தகுமாரிடம் கூடுதல் பொறுப்பா இருந்த மனிதவள மேலாண்மை துறை செயலர் பொறுப்பை, இப்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலரா நியமிக்கப்பட்டுள்ள நாகராஜனிடம், கூடுதல் பொறுப்பா குடுத்துட்டாவ வே...
''மனிதவள மேலாண்மை துறைக்கு தனி செயலர் வேணும்னு கேட்டதை ஏத்துக்காம, மறுபடியும் கூடுதல் பொறுப்புல அதிகாரியை போட்டிருக்கிறது, தலைமை செயலக சங்க நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

