/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தி.மு.க., ஆட்சிக்கு வில்லனாகும் அதிகாரிகள்!
/
தி.மு.க., ஆட்சிக்கு வில்லனாகும் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜூன் 15, 2025 12:00 AM

''அதிகாரியை மாத்த சொல்லுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னையை ஒட்டி, பட்டுக்கு பேர் போன ஊரு இருக்குல்லா... இந்த ஊரின் மாநகராட்சியில, நாலு வருஷமா ஒரு இன்ஜினியர் பணியில இருக்காரு வே...
''டெண்டர் பணிகள்ல, 'கட்டிங்' வாங்கியே கணிசமான அளவுக்கு சொத்துகளை சேர்த்துட்டாராம்... மற்ற அதிகாரிகளை எல்லாம் இடமாற்றம் பண்ணிட்டாலும், இவர் மட்டும் நாலு வருஷத்துக்கும் மேலா இங்கயே நீடிக்காரு வே...
''இவரது மேற்பார்வையில் கட்டிய கட்டடங்கள் எல்லாம் தரமில்லாமலும், பலம் இல்லாமலும், எப்ப இடிஞ்சு, யார் தலையில விழுமோங்கிற நிலையில இருக்கு... 'இவரை மாத்தியே ஆகணும்'னு ஆளுங்கட்சி கவுன்சிலர்களே, உயர் அதிகாரி களுக்கு புகார் அனுப்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கணேசன், சாயந்தரமா கால் பண்றேன்...'' என, நண்பரிடம் விடைபெற்றபடியே வந்த குப்பண்ணா, ''என்கிட்டயும் ஒரு இன்ஜினியர் மேட்டர் இருக்கு ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக கம்ப்யூட்டரை, கீழ்நிலை ஊழியர்கள் சிலர் பயன்படுத்தியிருக்கா... இதுல, பெண் ஊழியர்கள் குறித்து ஆபாசமான வாசகங்களை பதிவிட்டிருக்கா ஓய்...
''இந்த அலுவலகத்தின் கீழ் இருக்கற, 15க்கும் மேற்பட்ட அலுவலக கம்ப்யூட்டர்கள்ல, அந்த வாசகங்கள் தெரியும்படி பதிவேற்றமும் பண்ணிட்டா... இதை பார்த்து கொதிச்சு போன பெண் ஊழியர்கள், செயற்பொறியாளர், வத்தலகுண்டு போலீஸ், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்னு பலருக்கும் புகார் அனுப்பினா ஓய்...
''குற்றப்பிரிவு போலீசாரும், செயற்பொறியாளர் ஆபீஸ்ல வந்து சோதனை நடத்தினா... குற்றவாளிகளா ரெண்டு பேரை அடையாளம் கண்டிருக்கா... ஆனா, அவாளிடம் விசாரிக்கவும், போலீசார் கேக்கற தகவல்களை தரவும் செயற்பொறியாளர் மறுக்கறதால, வழக்கு பதிவு பண்ண முடியாம போலீசார் தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முதல்வர் சிறப்பு முகாமுக்கு எல்லாம் மதிப்பில்லைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கிட்டத்தட்ட 20 மாசத்துக்கு முன்னாடி, சென்னை, தாம்பரம் தாலுகா ஆபீஸ்ல நடந்த, 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு முகாம்ல, சொந்த நிலத்துக்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு, 88 வயது முதியவர் மனு தந்தாரு... அதுக்கு, 'இலவச வீட்டு மனை பட்டா கேட்ட உங்கள் மனு பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது'ன்னு தாசில்தாரு பதில் அனுப்பியிருக்காருங்க...
''முதியவரின் மனு நம்பர் வேற... தாசில்தார் தந்த பதிலோ, வேற ஒருத்தரின் மனுவுக்குரியது... தாசில்தார் செய்த தவறு பத்தி செங்கல்பட்டு கலெக்டர்கிட்ட மனு குடுத்தும் பதில் இல்லைங்க... 20 மாசமா அலைஞ்சு, திரிஞ்சும் பட்டா பெயர் மாத்த முடியாம முதியவர் ஓய்ஞ்சு போய், ஐகோர்ட்ல வழக்கு போட முடிவெடுத்திருக்காருங்க...
''இத்தனைக்கும், மாநில அரசுல இணை பதிவாளர் அந்தஸ்துல இருந்து ஓய்வு பெற்றவர் தான் அந்த முதியவர்... இவருக்கே இந்த கதின்னா, சாமானிய மக்களின் நிலையை நினைச்சு பாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அ.தி.மு.க., தேவையில்ல... இந்த மாதிரி அதிகாரிகளே போதும் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.