/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
டீக்கடை பெஞ்ச்: ஆளுங்கட்சி புள்ளியின் 'அட்ராசிட்டி' வசூல்!
/
டீக்கடை பெஞ்ச்: ஆளுங்கட்சி புள்ளியின் 'அட்ராசிட்டி' வசூல்!
டீக்கடை பெஞ்ச்: ஆளுங்கட்சி புள்ளியின் 'அட்ராசிட்டி' வசூல்!
டீக்கடை பெஞ்ச்: ஆளுங்கட்சி புள்ளியின் 'அட்ராசிட்டி' வசூல்!
PUBLISHED ON : பிப் 02, 2024 12:00 AM

''புது ஆட்களை வச்சு, 3வது பரிசு வாங்கிட்டார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''போன வருஷம், டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகம் சேர்க்கப்படாதது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்துச்சோல்லியோ... இந்த வருஷமும் இந்த பிரச்னை வந்துடக் கூடாதுன்னு, துறையின் இயக்குனர் மோகன் களம் இறங்கினார் ஓய்...
''இது சம்பந்தமா, டில்லியில நடந்த ஆலோசனை கூட்டங்களுக்கு, அவரே போயிட்டு வந்தார்... அதேபோல, பழைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் செய்தித் துறை அலுவலர்களை கழற்றி விட்டுட்டு, புதிய ஒப்பந்ததாரர்களை நியமித்து, அலங்கார வாகனத்தை வடிவமைச்சார்...
''இதுக்கு பலனா, அலங்கார அணிவகுப்புல, தமிழக ஊர்திக்கு 3வது பரிசு கிடைச்சிடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ரகசிய ஆய்வு நடத்தி, விலை உயர்வை அறிவிச்சுட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''டாஸ்மாக் விலை உயர்வை சொல்லுதீரா வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஆமாம்... அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருக்கிறதால, போன வருஷ கடைசியிலயே மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செஞ்சாங்க... ஆனா, கடும் மழை, வெள்ளத்துல தமிழகம் தத்தளிச்சதால, விலையை உயர்த்தலை பா...
''ஜனவரி முதல் வாரம் விலையை ஏத்த முடிவு செஞ்சாங்க... ஆனா, 'டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்னு ஓட்டு கேட்டதால தான், 2016 சட்டசபை தேர்தல்ல தோற்றோம்...
''அதனால, லோக்சபா தேர்தல்லயும், 'குடி'மகன்கள் ஓட்டு கிடைக்காம போயிடும்'னு தி.மு.க., தலைமைக்கு சிலர் தடை போட்டிருக்காங்க பா...
''அப்புறமா, மாவட்ட வாரியா ரகசிய ஆய்வு நடத்தியிருக்காங்க... அதுல, 'குடிமகன்களால, தேர்தல்ல எந்த பாதிப்பும் வராது'ன்னு தகவல் வரவே, விலையை ஏத்திட்டாங்க பா...''என்றார், அன்வர்பாய்.
''பட்டியல் போட்டு வசூல் பண்ணுதாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர ஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் மனைவி, நகராட்சியில முக்கிய பொறுப்புல இருக்காங்க...
''இதனால, நகர புள்ளி தள்ளுவண்டிக்கு தினமும் 200, தற்காலிக கடைக்கு 500, டாஸ்மாக் பாருக்கு மாசம், 1 லட்சம் ரூபாய்னு ரேட் பிக்ஸ் பண்ணி, வசூலை வாரி குவிக்காரு வே...
''இது போக, கட்டட அனுமதி, சொத்துவரி விதிப்பு, பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்புன்னு எல்லாத்துக்கும் தனித்தனியா தொகை நிர்ணயம் பண்ணி வசூலிக்காரு...
''தன் மாமூல் வேட்டைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை மிரட்டுறதால, அவங்க வேற நகராட்சிக்கு டிரான்ஸ்பர் கேட்டுட்டு இருக்காவ வே...
''கவுன்சிலர்கள் ஏதாவதுகேள்வி கேட்டாலும், கட்சி மேலிடத்தின் பெயரை பயன்படுத்தி, அவங்களை அடக்கிடுதாரு...
''பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வான ஜெயராமன், தொகுதி வளர்ச்சி நிதியில பயணியர் நிழற்குடை, ரேஷன் கடை கட்டுறதுக்கு வழங்கிய அனுமதியை முடக்கி வச்சு ஆட்டம் காட்டுனாரு வே...
''இதனால, கொதிச்சு போன ஜெயராமன், சமீபத்துல நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டமே நடத்திட்டாரு... 'இவரது அடாவடியால, லோக்சபா தேர்தல்ல பொள்ளாச்சியில தி.மு.க., வுக்கு பலத்த அடி விழும்'னு, ஆளுங்கட்சியினர் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வாங்க, நவநீத கிருஷ்ணன்... சூடா சுக்கு காபி குடியும்...'' என, நண்பரை குப்பண்ணா வரவேற்க, மற்றவர்கள் கிளம்பினர்.

