PUBLISHED ON : மே 28, 2026 07:11 AM

அமெரிக்காவின், 'நாசா' ஏவிய 'சைக்கி' விண்கலம், செவ்வாய் கிரகத்திற்கு வெகு அருகே கடந்து சென்றுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, செவ்வாயின் ஈர்ப்பு விசையை ஒரு பிரமாண்ட கவண் போல பயன்படுத்தி, தொலைதுார விண்கல் இலக்கை நோக்கி விண்கலத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தந்திரமான இயக்கத்தின்போது, செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து 300 கி.மீ., உயரத்தில் பறந்த விண்கலம், எரிபொருளை சேமிப்பதற்காக அக்கிரகத்தின் சுற்றுப்பாதை உந்துதலை வைத்து தன் பாதையை மாற்றியமைத்துக் கொண்டது.
இந்த விண்கலம் அனுப்பப்பட்டதன் நோக்கம், செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையே சுற்றும், '16 சைக்கி' என்ற விண்கல்லை அடைவது தான். இது, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரகமாக மாற முடியாமல், நின்ற ஒரு விண்கல்லாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கிட்டத்தட்ட, 1.65 லட்சம் சதுர கி.மீ.,க்கும் மேல் பரப்பளவை கொண்ட இந்த விண்கல்லில், பல அரிய உலோகங்கள் நிறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. பூமி உள்ளிட்ட பாறை கிரகங்களின் உலோக உட்பகுதிகள் எவ்வாறு உருவாகின என்பதற்கான முக்கியமான தடயங்களை இந்த விண்கல் வழங்கக்கூடும்.
திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், சைக்கி விண்கலம் 2029ம் ஆண்டில் தன் இலக்கான விண்கல்லை சென்றடையும். அதன் பின், மனித குலம் முதன்முறையாக ஒரு உலோக உலகத்தை மிக அருகில் இருந்து ஆராயும் வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு தொடங்கும்.





