/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
புதுவகை காந்தம் உருவாக்கும் கணினி நினைவகம்
/
புதுவகை காந்தம் உருவாக்கும் கணினி நினைவகம்
PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

எம்.ஐ.டி., இயற்பியலாளர்கள், 'பி-வேவ் காந்தம்' என்ற புது தினுசான காந்தத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை காந்தத்தை கணினி நினைவகச் சில்லுகளில் (Memory Chips) பயன்படுத்தினால், அவற்றின் செயல்பாட்டை பலமடங்கு வேகப்படுத்த முடியும்.
வழக்கமான காந்தங்களில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரே திசையில் இருக்கும். ஆனால் நிக்கல் அயோடைடு படிகத்தால் ஆன பி--வேவ் காந்தத்தில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரு சுழல் வடிவில் (Spiral Pattern) அமைந்துள்ளன.
எலக்ட்ரான்கள் இந்த வகையில் சுழல்வதில் மிகப்பெரிய நன்மை உண்டு. மிகமிககம்மியான மின்சாரத் துாண்டல் அல்லது ஒளிக்கதிர் பாய்ச்சல் மூலம், பி--வேவ் காந்தத்தின் காந்த ஆற்றலை உயர்த்தவோ, குறைக்கவோ முடியும்.
இந்த வகை காந்தத்தால் இயங்கும் நினைவுச் சில்லுகள் எளிதில் சூடாகாது என்பதோடு, இவற்றின் மின் நுகர்வும் மிகக் குறைவாகவே இருக்கும்.இது தற்போதைய தொழில்நுட்பத்தை விட ஐந்து மடங்கு வரை மின்தேவைகளைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, பி-வேவ் காந்தம் மிகக் குளிர்ந்த -213 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் மட்டுமே செயல்படுகிறது.
அறை வெப்பநிலையில் இயங்கக்கூடிய பி--வேவ் காந்தத்தை உருவாக்குவதே, அமெரிக்க எம்.ஐ.டி., விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட இலக்கு. அது சாத்தியமானால், கணினி தொழில்நுட்பத்தில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும்.