PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

பற்களை இழந்தவர்களுக்குச் செயற்கை பற்களை வைப்பது அவ்வளவுசுலபமான காரியமல்ல. இயற்கையான பற்களை, நரம்புகள் நிறைந்த மெல்லிய திசுக்கள், தாடை எலும்புகளுடன் சேர்க்கின்றன. இந்த நரம்புகள் தான் நாம் எப்படி உண்கிறோம், பேசுகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன.
இயற்கை பற்கள் விழுந்தபின் அதே இடத்தில் செயற்கையான செராமிக் பற்கள் வைப்பதற்காக தாடை எலும்பைத் துளையிட வேண்டி உள்ளது. இது வலியை உருவாக்கும்.
புதிய பல்லை இயற்கையான பல் போல் உணரமுடியாது.இதற்கான தீர்வை அமெரிக்காவின் டப்ட்ஸ் பல்கலை உருவாக்கியுள்ளது. செயற்கை பல்லின் அடியில் ஸ்டெம் செல்களையும், சில விதமான புரதங்களையும் இணைத்துப் புதுமை செய்துள்ளது. இவை இரண்டும் செயற்கை பல்லை தாடை நரம்பு, எலும்புடன் இணைய உதவுகின்றன. இந்தப் புதுமுறையில் வலி ஏற்படாது.
செயற்கை பல் இயற்கைப் பல் போலவே வேலை செய்யும். எலிகள் மீது சோதித்துப் பார்த்ததில் செயற்கை பல் வைத்த 6 வாரங்களில், இயற்கை பல் போலவே அது வேலை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.