/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
வாயில்லா ஜீவன்களும் வழிபட ஒரு கோயில்
/
வாயில்லா ஜீவன்களும் வழிபட ஒரு கோயில்
PUBLISHED ON : ஜன 14, 2025

மனஅமைதி வேண்டும் மனிதர்கள் கோயிலுக்குச் சென்று இறைவன் பாதத்தில் பாரத்தை இறக்கி வைப்பர். சிலர் வாழ்க்கையில் தனக்கோ, குடும்பத்தினருக்கோ நோய் தீர, துன்பம், தீங்கு வராதிருக்க இறைவனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டுவர்.
ஆனால் தங்கள் வாழ்வாதார கால்நடைகளை பாதுகாக்க நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கம் உள்ளதும், அக்கால்நடைகளுடன் வந்து அபிஷேகம் செய்து வழிபடுவதற்கென பிரத்யேக கோயில் உள்ளதும் எத்தனை பேருக்கு தெரியும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள சோமவாரப்பட்டியில்தான் இந்தக் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயில் முழுக்க முழுக்க கால்நடைகளுக்கானது.
சின்னஞ்சிறிய இக்கிராமத்தில், உள்ளது ஆல்கொண்டமால் கோயில். ஆலமரத்தின் அடியில் அமர்ந்த மால் என்னும் திருமால் அதாவது பெருமாள். இங்கு கோயில் கொண்டவர் வேணுகோபால். சுயம்புவாக உருவான ஒரு பெரிய கற்பலகை மீது புடைப்பு சிற்பங்களாக புல்லாங்குழலுடன் வேணுகோபால் அதன்கீழ் ராமர் சீதாதேவி, அடுத்து கல்கி அவதாரம் என உள்ளது.
பலநுாறு ஆண்டுகளுக்கு முன் ஒரு விவசாயி வளர்த்த மாடுகள் காட்டில் மேயச் சென்றன. மாலையில் வீடு திரும்பிய ஒரு பசு பால் சொரியாமல் இருந்தது. தினமும் இது தொடர்ந்தது. ஆனால் பால் அருந்தாத அதன் கன்று கொழுகொழுவென நன்றாக இருந்தது. வியந்த விவசாயி, மேய்ந்து திரும்பும் பசுவின் பால் எங்கே போகிறது என குழம்பினான். இதைக் கண்டறிய ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து கண்காணித்து திகைத்துப் போனான்.
மேயும் இடத்தில் ஒரு பாம்பு புற்றின் மீது பசு, சுயமாக பாலை சொரிந்துள்ளது. இதுகுறித்து ஒரு கோயில் பூசாரியிடம் கேட்ட விவசாயி அந்த இடத்தில் சுயம்புவாக இறைவன் இருப்பதை அறிந்து வழிபடத் துவங்கினார். மக்களும் அதைத் தொடர்ந்தனர். அப்படித்தான் இக்கோயில் உருவானது.
மாடு மட்டுமின்றி கோழி, ஆடு, வயல்களில் எலித் தொல்லை இருந்தால் எலி உருவங்களையும் நேர்த்திக் கடனாக சிறு சிலைகளாக வைத்துள்ளனர். வழிபாட்டில் பால் அபிஷேகம் முக்கியம். தைப்பொங்கல் துவங்கி, மாட்டுப் பொங்கல் உட்பட 3 நாட்கள் இக்கோயிலில் விசேஷம்.
மாட்டுப்பொங்கல் தினத்தன்று பிறக்கும் கன்றுகளை சலங்கை மாடு என நேர்ந்து விடுகின்றனர். பின்னர் அதற்கு சலங்கை கட்டி, உறுமி இசைத்து ஆடப்பயிற்சி அளித்து பொங்கலுக்கு மறுநாள் இக்கோயிலுக்கு வந்து தீர்த்தம், திருநீறு வாங்கிச் செல்கின்றனர்.
பெருமாள் கோயில் என்றாலும் இங்கு திருநீறுதான் பிரசாதம். மற்ற நாட்களிலும் மாடுகள் மட்டுமின்றி ஆடு, கோழிகள் என கால்நடைகளுடன் வந்து வழிபாடு நடத்துவதும் உண்டு. தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடை திறந்திருக்கும்.
உடுமலைப்பேட்டை பக்தர் எஸ்.முத்துக்குமார் கூறுகையில், மாடுகளுக்காக வேண்டுதலுடன் வருவோர் பாலாபிஷேகம் செய்வர். இதனால் கால்நடைகள் செழித்து, விவசாயம் பெருகும் என்பது நம்பிக்கை'' என்றார்.
கோயில் பூஜாரி வேணுகோபால், செயல் அலுவலர் ராமசாமி கூறியதாவது: அடர்ந்த வனத்தில் சுயம்புவாக உருவான இக்கோயில் வளாகத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி பீடமும், வெளியே ரேணுகாதேவி, மதுரை வீரன் சிலைகளும் உள்ளன. பொங்கலையொட்டிய 3 நாள் விசேஷம்தான் இங்கு பிரதானம். சிறப்பு பஸ் வசதி உண்டு'' என்றார்.
தொடர்புக்கு: 90958 95119.
- ஜி. மனோகரன்