PUBLISHED ON : ஜூலை 05, 2025

பறக்கும் அணில்!
வட அமெரிக்க காடுகளில் காணப்படுகிறது பறக்கும் அணில். இது, 12 அங்குலம் வரை நீளம் உடையது. விதை, பழம், காளான், சிறு பூச்சிகளை உணவாக கொள்ளும். பறவை போல பறக்க முடியாது; ஆனால், மரம் விட்டு மரத்துக்கு காற்றில் மிதந்தபடியே தாவ முடியும். இது, பறப்பது போல் இருக்கும்.
இந்த அணில் இனத்தின் கால் பாதத்தை ஜவ்வுத் தோல் இணைக்கிறது. அதன் உதவியால் காற்றில் மிதக்க முடிகிறது. ஒரு பகுதியில் இருந்து கால்களை விரைப்பாக நீட்டிப் பாயமுடியும். இது பட்டம் பறப்பதை போல காட்சி தரும். பறக்கும் அணிலின் விலங்கியல் பெயர், 'கிளாவ்கோமிஸ் சாப்ரினஸ்' என்பதாகும்.
சிலந்தி குரங்கு!
அரிய விலங்கினங்களில் ஒன்று சிலந்தி குரங்கு. தென் அமெரிக்க காடுகளில் காணப்படுகிறது. பொதுவாக கருப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். கண்களைச் சுற்றி சதை நிறைந்த வளையம் காணப்படும். மரங்களில் திறம்பட தாவி செல்வதற்கு உகந்தவாறு நீண்ட கை, கால்கள் மற்றும் வால் உடையது. கைகளில், கட்டைவிரல் இருக்காது. இதானல் மரக்கிளையை எளிதாக பற்றிப்பிடிக்க முடியும். இது அடுத்த கிளைக்கு தாவி நகர்வதற்கு உதவியாக அமைந்து உள்ளது.
உயர்ந்து வளர்ந்த மரங்களில் வசிக்கும் வாழ்க்கை முறையை கொண்டுள்ளது. பழங்கள், இலைகள், மொட்டு மற்றும் பூச்சிகளை உணவாக கொள்ளும். இந்த குரங்கு இனம் அழியும் அபாய நிலையில் உள்ளதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. காடுகளை பாதுகாப்பதன் வழியாக இந்த உயிரினத்தை வாழவைக்க முடியும்.
- வி.சி.கிருஷ்ணரத்னம்