
அப்பளம் ஒரு இந்திய உணவு. பப்படம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியரால் விரும்பப்படுகிறது. அதிக சூரிய ஒளியும், குறைந்த மழை பொழிவும் உள்ள சூழ்நிலையில் எளிதாக தயாரிக்கலாம்.
கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து, 1940ல் குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று மதுரையில் அப்பளத் தொழிலை துவங்கியது. அப்பள தயாரிப்பில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தற்போது திகழ்கிறது மதுரை. இங்கு, நான்கு அளவுகளில் தயாராகிறது. ஆறு மாதம் வரை கெட்டு போகாது என்கின்றனர் வியாபாரிகள். கேரளாவில் ஒரு நாள் மட்டுமே அப்பளம் வெயிலில் காய வைக்கப்படும். மதுரையில் மூன்று நாட்கள் வரை காயும்.
அப்பளத்தில் பல வகைகள் உள்ளன. வட்ட வடிவில் உள்ளது தான் பெருவாரியாக விரும்பப்படுகிறது.
தமிழகத்துக்கு தேவையான அப்பளத்தில், 70 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது மதுரை. இங்கு, 700க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன; இவற்றில், ஆண்டுக்கு 3 லட்சம் கிலோ வரை அப்பளம் தயாராகிறது. இதன் மதிப்பு, 300 கோடி ரூபாய். மதுரை மக்கள் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
மதுரையில் அனுப்பானடி, சிந்தாமணி, ஜெய்ஹிந்து புரம், சோழவந்தான் பகுதிகளில் அதிக அளவில் அப்பளம் உற்பத்தி நடக்கிறது. தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, நெல்லையிலும் தயாராகிறது அப்பளம்.
- கோவீ.ராஜேந்திரன்