
திருப்பூர், வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில், 2010ல், 10ம் வகுப்பு படித்த போது ஆசிரியர் தினவிழா நடக்கவிருந்தது. தமிழ் பாடம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அதனால், தமிழாசிரியை பர்வதராணி அம்மாவை மிகவும் பிடிக்கும். அவருக்கு, ஒரு புத்தகம் அன்பளிப்பாக கொடுக்க முடிவு செய்தேன்.
வாழ்த்து கூறி, கொடுக்க முயன்ற போது, வாங்க மறுத்து விட்டார். மிகவும் வருந்தியபடி, 'ஏன் மறுக்கிறீங்க அம்மா...' என்று கேட்டேன். கனிவுடன், 'உன்னிடம் அன்பளிப்பு வாங்கினால், இதை பார்க்கும் மற்ற மாணவியரும் இதுபோல் கொடுக்க வேண்டும் என எண்ணுவர்... படிக்கும் மாணவர்களுக்கு பரிசு வாங்க பணம் எங்கிருந்து கிடைக்கும்...
'பெற்றோரிடம் கேட்டு தொல்லை கொடுப்பர். கிடைக்கா விட்டால், முறைகேடாக அதை பெற முயற்சிப்பர். உன் அன்பு மிகப் பெரிது. நன்றாக படித்து எதிர்காலத்தில் பெரும் சாதனைகள் செய். அது தான், நீ தரும் சிறந்த அன்பளிப்பு...' என்று அறிவுரைத்தார். அவர் மீதிருந்த மரியாதையும், அன்பும் பன்மடங்கு உயர்ந்தது.
எனக்கு, 29 வயதாகிறது; தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிகிறேன். அந்த தமிழாசிரியையின் கொள்கையை வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை மாணவ, மாணவியர் கடைபிடிக்க தவறாது வலியுறுத்தி வருகிறேன்.
- நா.பாசிதா பானு, திருப்பூர்.
தொடர்புக்கு: 73738 45596