
எம்.ராஜேந்திரன், லால்குடி, திருச்சி: 'சென்னையில் வாகனம் ஓட்டும் போது, மூன்று விதிமீறல்களுக்கு மட்டும், கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும்...' என, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளாரே...
'ஹெல்மெட்' போட்டாலும், 'ராங் ரூட்'டில் வரவில்லை என்றாலும், சிக்னல்களை மதித்து நடந்தாலும், 'நீங்கள் சாலை விதியை மீறி உள்ளீர்கள். அபராதம் கட்ட வேண்டும்...' என, வீடுகளுக்கே நோட்டீஸ் அனுப்பும் போலீசாரின் விதிமீறலுக்கு, பெரிய குட்டு வைத்து விட்டார், கமிஷனர்; சபாஷ்!
ஆர்.ஹரி கோபி, டில்லி: இன்றைய இளைஞர்கள், அரசியலில் அதிக ஆர்வமின்றி இருப்பதற்கு, அவர்களுக்கு தேசபக்தி இல்லாதது தான் காரணமா?
பொது அறிவை வளர்ப்பதற்கோ, நாட்டு நடப்பை பற்றி அறிவதற்கோ ஆர்வமே இன்றி, நாளிதழ்களைப் படிப்பதை தவிர்த்து, எப்போதும் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால், தேச பக்தியும், இவர்களிடம் இல்லை!
* ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி: கர்நாடகா, கூடுதலாக வழங்கிய, 63 டி.எம்.சி., நீரை, தமிழகம் வீணடித்துள்ளதே...
தேவையான இடங்களில் கதவணைகள் கட்டி இருந்தால்; தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. யாரிடமும் கையேந்தி போராட வேண்டி இருக்காது!
* வி.லோகாம்பாள், தாராபுரம்: தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், 'முதல் கையெழுத்து, மதுவை ஒழிக்கவே...' எனக் கூறினர். நான்காண்டு முடிந்தது; முதல்வர் இன்னும் கையெழுத்து போடவில்லையே...
போட்டு விட்டால், 2026 தேர்தல் வரும் போது, மறுபடியும், 'மதுவை ஒழிப்போம்' என, வாக்குறுதி அளிக்க முடியாதே! ஆட்சி மாறி விட்டால், கருப்பு உடை அணிந்து, 'மதுவை ஒழிப்போம்' என, பதாகை ஏந்தி, வீட்டின் வாயிலில் குடும்பத்துடன் நின்று, மறுபடியும் தர்ணா செய்வர்!
என்.சங்கர், தீனம்பாளையம், கோவை: பால் விலையை மூன்று முறையும், மின்சார கட்டணத்தை மூன்று முறையும், சொத்து வரியை மூன்று மடங்காகவும் ஏற்றிய தமிழக அரசு, திரைப்படங்களுக்கு மட்டும் சலுகை அளிக்கிறதே... ஏன்?
பெரும்பாலான திரைப்படங்களை, ஆளுங்கட்சியின் குடும்பத்தினரே எடுக்கின்றனர்; வெளியிடுகின்றனர். அதனால், சலுகை!
எல்.என்.சிவகுமார், புழுதிவாக்கம், சென்னை: தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் துறை முதலீடுகள், ஆந்திர மாநிலத்துக்கு செல்வதாக சொல்லப்படுகிறதே...
அங்குள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், குறைவான, 'கட்டிங்' கேட்கின்றனர் போலும்; அதனால், அம்மாநிலத்துக்கு தொழில் துறையினர் சென்று விடுகின்றனர்!
ஜி.கிருஷ்ணமூர்த்தி, வேளச்சேரி, சென்னை: தமிழகத்தில் இளைஞர்களிடம் தமிழ் மொழி மீதான பற்று குறைந்து வருவதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளது பற்றி...
வேலைவாய்ப்பு இருப்பதில்லை என்பது, முக்கிய காரணம். தமிழை நல்ல முறையில் பேச, எழுத கற்றுக் கொடுப்பதே, இப்போது துர்லபமாகி விட்டது.
சிறு குழந்தைகள் கூட, ஆங்கிலத்தில் பேச வேண்டும் என, பெற்றோர் விரும்புகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழை முழு மூச்சாக அமல்படுத்தவில்லை என்பதே உண்மை!