Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கேப்டன் விஜயகாந்த்! (27)

கேப்டன் விஜயகாந்த்! (27)

கேப்டன் விஜயகாந்த்! (27)


PUBLISHED ON : பிப் 22, 2026

Follow on Google

PUBLISHED ON : பிப் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயகாந்த் ஆரம்பித்த, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணைந்த முதல் பிரபல அரசியல் பிரமுகர், பண்ருட்டி ராமச்சந்திரன். பொது வாழ்வில் பழுத்த அனுபவசாலி. தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி என, வெவ்வேறு இயக்கங்களில் செல்வாக்கோடு இருந்தவர்.

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., உடல் நலிவுற்ற காலத்தில், தமிழகத்தின் நிழல் முதல்வர் என, பிரபலமானவர். எம்.ஜி.ஆருக்கு முழு நம்பிக்கைக்குரியவர். கடந்த, 1983ல், ஐ.நா., சபையில், ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும், இலங்கை அதிபர், ஜெயவர்த்தனேவின் கொடுங்கோல் அரசு பற்றியும் பேச, எம்.ஜி.ஆரின் துாதுவராக அனுப்பப்பட்டவர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஏறக்குறைய, எட்டு மாத கைக்குழந்தை. 2006 கோடையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

எம்.ஜி.ஆருக்கு பின், தமிழகத்தை ஆளும் வாய்ப்பு, முன்னாள் முதல்வர்கள், கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் மாறி மாறி கிடைத்தது.

அடுத்தும், அ.தி.மு.க.,வே ஆட்சியை பிடிக்கும் என, சகலரும் எண்ணிய காலம். கேப்டனின் அதிரடியான அரசியல் நுழைவு மாபெரும் மாற்றங்கள் நிகழுமோ என்று யோசிக்க செய்தது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வழக்கம்போல் தங்களுக்கு தோதான இயக்கங்களுடன் கூட்டணி பலத்தோடு களமிறங்கின.

'மக்களோடு கூட்டணி' என்ற வரலாறு காணாத, புதிய முழக்கம், விஜயகாந்திடம் பிறந்தது. '234 தொகுதிகளிலும் தனித்து போட்டி' என, விஜயகாந்த் எடுத்த விஸ்வரூபம், அனைவரது புருவங்களையும் உயர்த்தியது.

அதுமட்டுமல்ல, தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்காக செலவு செய்யப்பட்ட ஒவ்வொரு நயா பைசாவிலும், விஜயகாந்தின் வியர்வை வாசம் இருந்தது. 'கட்சி வளர்ச்சிக்காக தேர்தல் நிதி வசூலிக்க மாட்டேன்...' என்று அதிரடியாக, பொதுவெளியில் அறிவித்த ஒரே கட்சி தலைவர், விஜயகாந்த் மட்டுமே.

மக்களிடம் மனம் திறந்து பேச மொழி அவசியமல்ல. சொல்ல வரும் கருத்துகளே முக்கியம் என, பேச்சுத்தமிழை நடைமுறைப்படுத்தினார். 'மைக்' முன் பேசுவதானாலும், வீடுகளில் சகஜமாக பேசுவது போல் மனம் திறந்து பேசினார்.

அதற்கு, மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. சொல்ல வந்ததை சுருக்கமாக, விபரமாக உணர்த்தும் ஆற்றல், விஜயகாந்தின் அடையாளமாகிப் போனது. பிரசாரக் கூட்டங்களில், விஜயகாந்தின் கேள்விகளில் சத்தியத்தின் தீ, கொழுந்து விட்டு எரிந்தது.

அரசின் விலையில்லா திட்டங்களில் பயன் பெறுவதற்கு கூட லஞ்சம், ஒவ்வொன்றுக்கும் காசு கொடுத்தால் மட்டுமே காரியம் ஆகும் என்று, கழக ஆட்சியின் அடிப்பொடிகளால் தொடர்ந்து அவதியுற்று வருகிறது தமிழகம். அதனால், பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் மனக்குமுறல்கள், விஜயகாந்தின் பேச்சில் நெருப்பாக கொப்பளித்தன.

'மாத்தி மாத்தி ஓட்டுப் போடறீங்க. நீங்க ஓட்டுப் போடறவங்க என்னா பண்ணுறாங்க? சட்டசபையை நடத்த விடாம ரகளை தான் பண்ணுறாங்க. மந்திரி பதவிக்கு அடிச்சிக்கிறாங்க. தஞ்சாவூர் விவசாயி எலிக்கறி தின்னானே... அவனுக்கு நல்லது பண்ணனும்ன்னு மத்திய அமைச்சரவையில் வேளாண்மை துறையை யாராவது கேட்டு வாங்கினாங்களா அல்லது காவிரி பிரச்னையை தீர்க்க, குடிநீர் பிரச்னையை தீர்க்க நீர்வளத்துறையை கேட்டு வாங்கினாங்களா? சுயலாபத்துக்காக வருமானம் வர்ற துறையா பார்த்து தானே கேட்டு வாங்கறாங்க? அரசியல் பக்கமே வராதவங்க ஜெயிச்சு, எம்.பி.,யா, மந்திரியா வராங்க...' என்றார்.

லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த இன்னொரு, எம்.ஜி.ஆராக அடித்தட்டு மக்கள், கேப்டனை தரிசித்தனர். மக்கள் சமுத்திரத்தில், விஜயகாந்த அன்றாடம் நீந்த வேண்டியிருந்தது. விஜயகாந்தை வெகு சீக்கிரத்தில், கருப்பு எம்.ஜி.ஆர்., ஆக அடையாளப்படுத்தினர்.

'லெட்டர் பேட்' அரசியல்வாதிகள் பழைய பல்லவியைத் துவங்கினர்.

'விஜயகாந்த், நாயுடு வம்சத்தை சேர்ந்த தெலுங்கர். போலி வாக்குறுதிகளால் தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்...' என்றெல்லாம் பேசினர்.

ஆனால், 'தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற, நாமக்கல் கவிஞரின் வாசகங்களையே காலமெல்லாம் தாங்கிப் பிடித்தார், விஜயகாந்த்.

தி.மு.க.,வோடு இணக்கமாக இருந்த இளைய தலைமுறையின் அபிமானமும், இன்னொரு பக்கம், கருப்பு எம்.ஜி.ஆராக அ.தி.மு.க.,வின் தாய்க்குலங்களின் ஆதரவும், விஜயகாந்துக்கு கிடைத்தன.

தொழிலாளி வர்க்கம், விஜயகாந்தின் வள்ளல் தன்மையை எண்ணி வியந்தது. ஜாதி பேதமற்ற சமுதாய சிற்பியாக நடுநிலையாளர்கள், விஜயகாந்தை வரவேற்றனர்.

விஜயகாந்த் சந்திக்கிற முதல் தேர்தல் அது. அதனால், அவரது அரசியல் செல்வாக்கு பற்றியும், கேப்டனுக்கான மக்கள் ஆதரவு குறித்தும் எல்லாருக்கும் கேள்விகள் இருந்தன.

விருத்தாச்சலத்தை தனக்காக தேர்வு செய்து அறிவித்தார், விஜயகாந்த். தேர்தல் கமிஷனிடம், 'முரசு' சின்னம் கேட்டு விண்ணப்பித்தார், விஜயகாந்த். அது, கிடைத்து விட்டது.

அனுபவமிக்க அரசியல் ஆசான்களுக்கு, வியப்புக்குறியாக அச்சமூட்டினார், விஜயகாந்த். விஜயகாந்தின் ஆளுமை குறித்து, கருணாநிதிக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், அரசியலில் எதையும் முடிவு செய்வது மக்கள் மாத்திரமே. அதனால், விஜயகாந்த் மீதான கோபத்தை சற்றே தணித்துக் கொண்டார்.

ஜெயலலிதா பயமறியாதவர். கருணாநிதியை ஏற்கனவே இருமுறை வென்ற அனுபவசாலி. ஆனாலும், 'கருப்பு எம்.ஜி.ஆர்.,' என்ற பதம், அவரது இயக்கத்தையும் பதைபதைக்க வைத்தது.

தி.மு.க., அ.தி.மு.க.,வைப் போல், விஜயகாந்தை அசட்டை செய்வதாக காட்டிக்கொள்ளவில்லை, பா.ம.க.,

தே.மு.தி.க.,வின் தேர்தல் அறிக்கையை கண்டு இதெல்லாம் சாத்தியமா? என்று கேட்காதவர்களே கிடையாது.

தேர்தல் அறிக்கையில் இருந்த சில அம்சங்கள்: ரேஷன் பொருட்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் வந்து வினியோகிக்கப்படும். வீட்டுக்கு ஒரு சீமைப்பசு. ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் குடும்பத்தலைவி பெயரில் மாதம், 500 ரூபாய் அஞ்சலக சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். மாதந்தோறும் ஏழைக் குடும்பங்களுக்கு, 15 கிலோ அரிசி. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சம உரிமையும், சலுகைகளும் வழங்கப்படும். நீதிமன்றத்தில், 'திருக்குறள்' சத்தியப்பிரமாண நுாலாக அங்கீகரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் அனைவருக்கும் தரமான, இலவச மருத்துவ சிகிச்சை. கிராமந்தோறும் பொதுக் கழிப்பிடங்கள் உருவாக்கப்படும்.

மேலும் இடம்பெற்ற சில திட்டங்களைப் பற்றி அடுத்தவாரம்...



- தொடரும் பா. தீனதயாளன்

நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap