தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: தந்தையே உன் தியாகத்தால் தான்...

கவிதைச்சோலை: தந்தையே உன் தியாகத்தால் தான்...

கவிதைச்சோலை: தந்தையே உன் தியாகத்தால் தான்...


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 21 - தந்தையர் தினம்

வெயிலில் வாடிய உன் கரங்கள் வீட்டிற்கு நிழலை வழங்கியது...

வெறுமையான நாட்களிலும் அதுவே

முயன்று மகிழ்வை பரப்பியது!

பசியை மறைத்த உன் சிரிப்பு

பாசமாக எங்களைத் தழுவியது...

பாரமாய் இருந்த வாழ்க்கையை

இறகைப் போல் லேசாக்கியது!

காலையில் கிளம்பும் உன் காலடி

குடும்பத்தின் நம்பிக்கையானது...

காலம் முழுதும் உழைத்த கைகளே

எங்கள் எதிர்காலம் ஆனது!

கண்டிப்பு கலந்த வார்த்தைகள்

கல்லாய் விழுந்ததென நினைத்தோம்...

காலம் சென்றபின்னரே புரிந்தது

வாழ்வின் அடித்தளம் அவையென!

சோர்வடைந்த உன் தோள்கள்

சொல்லாமல் சுமைகளைத் தாங்கின...

சொந்த ஆசைகளைத் துறந்ததால்

குடும்பக் கனவுகள் நிறைவேறின!

பாதை தெரியாத காலத்தில்

அனுபவத்தால் வழிகாட்டினாய்...

பயத்தில் மனம் சோர்ந்தபோது

பக்கத்தில் நின்று துணிவூட்டினாய்!

சில நேரங்களில் கடுமையாய்

சில நேரங்களில் கருணையாய்...

எங்கள் நினைவுகளில் நீக்கமற

நிறைந்து நிற்கிறாய் இறையுருவாய்!

இன்று நாங்கள் நடந்திடும் பாதை

நீ வாழ்ந்து சென்ற வழியில் தான்...

எங்கள் ஒவ்வொரு வெற்றியும்

தந்தையே உன் தியாகத்தால் தான்!

- டி.எல்.குமார், விழுப்புரம். தொடர்புக்கு: 76396 86695.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us