
'தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள் பிறந்தனர்?' என கேட்டார், ஒருவர்.
'தசரதன் கேட்டது, ஒரு பிள்ளை தான்...' என்றார், இன்னொருவர்.
தனக்கு பின்னாடி நாட்டை ஆளவும்... தான் நல்ல கதி அடைய உதவவும், தசரதன் கேட்டது ஒரு பிள்ளை தான். அதே மாதிரி, தேவர்கள் கேட்டதும், ராவண வதம் செய்ய, ஒரு ராமனை தான். அப்படி இருக்கும்போது, எதுக்கு நான்கு பிள்ளைகள்?
இதற்கு, ஆன்மிக பேச்சாளர் ஒருவர் கொடுத்த விளக்கம்:
இந்த உலகத்தில் நான்கு வகையான தர்மங்கள் உண்டு. நான்கு வகையான தர்மங்களையும், மக்களுக்கு அனுசரித்து காட்டு வதற்காகத்தான், அந்த நான்கு சகோதரர்கள் தோன்றினரே தவிர, ராவணனை வதம் செய்வதற்காக மட்டும் அல்ல.
நான்கு வகையான தர்மங்களில் முதலாவது, சாமானிய தர்மம். அதாவது, பிள்ளைகள் - பெற்றோரிடமும், சீடன் - குருவிடமும், மனைவி - கணவனிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும். இது மாதிரி உள்ளதெல்லாம், சாமானிய தர்மங்கள்.
இதை அனுசரித்து நடந்து காட்டியவன், ராமன்.
சாமானிய தர்மங்களை ஒழுங்காக செய்து வந்தால், கடைசியில், இறைவன் அடி ஒன்றே நிரந்தரம்... மற்ற எதுவும் சாஸ்வதமல்ல என்ற நினைப்பு வருமாம். அதனால் தான், குலசேகர ஆழ்வார், 'இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்...' என்று கூறினார்.
இரண்டாவது, சேஷ தர்மம்.
'தாமரை போன்ற உன் பாதங்களைச் சுற்றி, நான் தேன் வண்டு போல வந்து கொண்டிருக்க வேண்டும்...' என்றாராம், கிருஷ்ண லீலா தரங்கிணி ஆசிரியர்.
இதைத்தான் அனுசரிச்சுக் காட்டினான், இலக்குவன்.
மூன்றாவது, விசேஷ தர்மம். அதாவது, துாரத்தில் இருந்து கொண்டே, எப்போதும் இறைவன் ஞாபகத்துடன் இருப்பது.
சேஷ தர்மத்தை விட, விசேஷ தர்மம் கடினம். பகவானுக்கு பக்கத்திலேயே இருந்து கொண்டு, அவன் ஞாபகமாக இருப்பது கஷ்டமில்லை. ஆனால், துாரத்தில் இருந்தபடி அவனையே நினைக்கிறது கடினம். அதை செய்து காட்டியவன், பரதன்.
நாலாவது, விசேஷ தர தர்மம்.
இறைவனை விட, அவனுடைய அடியார்களுக்கு தொண்டு செய்வது தான், இந்த தர்மம்.
இதைக் கடைப்பிடித்து காட்டியவன், சத்ருக்கனன். அதனால் தான், பரதனை விடாமல் பின்பற்றி அவனுக்கு தொண்டுகள் செய்தான்.
இப்படி நான்கு வகையான தர்மங்களையும் கடைப்பிடித்து மக்களுக்கு காட்டுவதற்காகத்தான், இறைவன், நான்கு அவதாரங்களாக தோன்றினார் என்று விளக்கம் கொடுத்தார், அந்த பேச்சாளர்.
பி.என்.பி.,