
புது வகை திருட்டு... கவனம்!
எங்கள் பகுதியில், புதிதாக திறக்கப்பட்ட மொபைல் போன் ஷோரூமின் விளம்பர நோட்டீசை, மூன்று இளைஞர்கள், வீடு வீடாக கொடுத்து சென்றனர்.
பூட்டப்பட்டிருந்த வீட்டு வாசலில் நோட்டீசை வைத்து, காற்றில் பறக்காதபடி கல்லை வைத்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நோட்டீஸ் கொடுத்தனர். நான்காம் நாள் காலை, வீட்டை பூட்டி விட்டு, ஊருக்கு போயிருந்த இரண்டு வீடுகளில் திருடு போயிருந்தது.
அக்கம் பக்கத்தினர், சம்பந்தப்பட்ட வீட்டினருக்கு தகவல் தந்து, வரவழைத்து, போலீசில் புகாரளித்தனர்.
விசாரணையில், மொபைல் கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள், விளம்பர நோட்டீசை எடுத்து வந்து, பூட்டிய வீடுகளில் தொடர்ச்சியாக போட்டுள்ளனர். நோட்டீஸ் எடுக்கப்படாததை நோட்டமிட்டு, ஆட்கள் இல்லையென்பது உறுதியானதும், இரவில் திருடிச் சென்ற விஷயம் தெரிய வந்தது.
அன்றிலிருந்து, அக்கம்பக்கம் வீட்டினர், வெளியூர் சென்றால், வீட்டு வாசலில் கிடப்பவற்றை அகற்றி, கூட்டிப் பெருக்கி கோலம் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டோம்.
வாசகர்களே... புது வகை திருடர்களிடமிருந்து, உடமைகளை காத்துக்கொள்ள, கூடுதல் கவனத்துடன் இருங்கள்.
மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.
மனைவி தந்த, 'சர்ப்ரைஸ்!'
சமீபத்தில், மனைவியோடு வட மாநில சுற்றுலா சென்றிருந்தேன். செல்லும் இடங்களில், எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற, அசட்டுத் துணிச்சலோடு இருந்தேன்.
முதலில் போய் இறங்கிய ஊரில், எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அங்கிருந்தவர்களுக்கு, ஹிந்தி தவிர, ஆங்கிலம் தெரியவில்லை; எனக்கு ஆங்கிலம் தவிர, ஹிந்தி தெரியவில்லை. 'என்னடா இது சோதனை, எப்படி இங்கே மற்றவரோடு தொடர்பு கொள்வது...' என்று நான் குழம்பி நின்றேன்.
அவர்களிடம், சரளமாக ஹிந்தியில் பேசி, எனக்கு, 'சர்ப்ரைஸ்' கொடுத்தாள், மனைவி. 'உனக்கு, ஹிந்தி பேச வருமா? இது எனக்கு தெரியாதே... எங்கே கற்றுக் கொண்டாய்?' என்றேன்.
'என் நிறுவனத்தில் பணிபுரியும் பாதி பேர், வட மாநிலத்தவர்கள் தான். எங்கள் மூலம் அவர்கள், தமிழில் பேச கற்றுக் கொள்வது போல், அவர்கள் மூலம் நாங்களும், ஹிந்தியில் பேச கற்றுக் கொண்டோம்...' என்றாள்.
வட மாநிலத்தவரால், நம் வேலை பறிபோகிறது என்ற பாதிப்பை மட்டுமே கூறி புலம்பி வருகிறோம். அவர்களோடு பழகுவதால் நமக்கு கிடைக்கும் ஹிந்தி மொழியறிவு குறித்த நன்மையையும், ஹிந்தி தெரிவதால், நாடு முழுக்க நமக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பெற, சிந்தித்து செயல்படலாமே!
— வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார்.
உழைப்பை நம்பி வாழும் இளைஞர்கள்!
அலுவலக நண்பரின் வருகைக்காக, வீட்டில் காத்திருந்தேன். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் என்னிடம் வந்து, 'நாங்க ரெண்டு பேரும், 10வது வரை தான் படிச்சிருக்கோம். ரொம்ப வறுமையான குடும்பம்.
'எங்க கிராமத்துல வேலை கிடைக்காததால், இங்கே வாடகை வீட்டில் தங்கி வேலை செய்றோம்...' என, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ் புக்கை காட்டி, 'உங்க வீட்ல ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க, செஞ்சு தர்றோம்...' என்றனர்.
'என்ன வேலை செய்வீங்க...' என்றேன்.
'தோட்டத்துல களை அகற்றுதல், புதுசா மரக்கன்று நட, குழி தோண்டி நட்டுக் கொடுப்போம். டாய்லெட் மற்றும் தண்ணீர் தொட்டியை சுத்தம் பண்ணுவோம். மாடித் தோட்டத்திலிருக்கிற பழுப்பு இலைகளையும், பூச்சிகளையும் அகற்றி, தொட்டிகளில் புது மண் நிரப்புவோம். செடிகளுக்கு மருந்து அடிப்போம். இது தவிர, வேறு எந்த வேலைன்னாலும் செய்து கொடுப்போம்...' என்றனர்.
அவர்கள் சொன்ன வேலைகளில் சில, என் வீட்டில் இருந்ததால், அந்த வேலைகளை ஒப்படைத்தேன். அனைத்து வேலையையும் பொறுப்பாக முடித்து, நியாயமான கூலியையே கேட்டனர்.
உழைப்பை நம்பி வாழும் அவர்களின் தன்னம்பிக்கையை பாராட்டினேன். நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு உதவும் என்று அவர்களின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு, கேட்ட கூலியை கொடுத்தனுப்பினேன்.
— செ.விஜயன், சென்னை.