
என். பர்வதவர்த்தினி, புதுச்சேரி: உங்களின் உயர்ந்த லட்சியம் எது?
வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான்!
பா. திரிபுரசுந்தரி, திருநெல்வேலி: பலாத்காரத்தை பயன்படுத்தாமல், அகிம்சையால், தீயவர்களை திருத்தி விட முடியுமா?
முடியாது. எதற்குமே பலாத்காரம் கொஞ்சம் தேவைப்படுகிறது. மிருதங்கம் இருக்கிறதே, இதை லேசாக தட்டினால், சத்தம் வருமா... ஓங்கி தட்டினால் தானே இனிய நாதம் பிறக்கிறது!
* வி. ராஜசேகர், துாத்துக்குடி: வாழ்க்கையில் முன்னேறி, ஓர் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, சுற்றியுள்ள உறவுகளே பொறாமைப்பட்டு முட்டுக்கட்டை போடுகின்றனரே...
பொறாமை ஒரு படிக்கல்; முட்டுக்கட்டை அடுத்த படிக்கல் என எண்ணி, உயர்ந்து செல்ல முயல வேண்டும். விடா முயற்சியும், ஊக்கமும் இருந்தால், யாருடைய முட்டுக்கட்டையும் ஒன்றும் செய்து விடாது.
முயற்சியில் தேக்கம் ஏற்படும் போதெல்லாம், முட்டுக்கட்டை போடும் உறவுகளை மனதில் நினையுங்கள், வெற்றிக் கொடி சில அடி துாரத்தில் தோன்றி, தைரியம் ஏற்படும்!
* கே.மலர்விழி, திருச்சி: நீங்கள் விரும்புவது ஜனநாயகமா, கம்யூனிசமா, சர்வாதிகாரமா?
ஜனநாயகம்! ஆனால், நம் நாட்டில் இருப்பது போன்ற, அவுத்துவிட்ட ஜனநாயகம் அல்ல... சிங்கப்பூரில் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய ஜனநாயகம்...
நம் நாட்டு ஜனநாயகம், சட்டம் - ஒழுங்கு கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் அல்லவா உள்ளது!
சி. கார்த்திகேயன், பெரம்பலுார்: என் நண்பன், நிறைய பொய் பேசுகிறான்... அவனை திருத்துவது எப்படி?
அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தச் சொல்லுங்கள். ஏனெனில், அரசியல் பொது மேடை பேச்சுகளில் தான், ஏராளமான பொய்கள் உற்பத்தி ஆகின்றன.
ஆர். ஜெயபால், சென்னை: ஒரு அரசியல்வாதி, தேர்தலில் தோற்க, காரணம் என்னவாக இருக்கும்?
மக்கள், அவரை புரிந்து கொண்டனர் என்று அர்த்தம்!