PUBLISHED ON : ஆக 12, 2026

வைக்கோல் தீவனத்தை பதப்படுத்தி உபயோகப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் வேளாண் இணை இயக்குநர் மற்றும் வேளாண் தோட்டக்கலை பயிர் சாகுபடி ஆலோசகர் பா.இளங்கோவன் கூறியதாவது:
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், வைக்கோலை சேகரித்து வைப்பதில்லை. மாறாக, வைக்கோலை நிலத்திலேயே எரித்து விடுகின்றனர். இல்லையெனில், உழவு ஓட்டி விடுகின்றனர்.
நெல்லை காட்டிலும், வைக்கோலுக்கு தீவன சந்தையில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது என்பதை விவசாயிகள் மறந்து விடுகின்றனர்.
குறிப்பாக, 1 ஏக்கர் நெல் சாகுபடி செய்யும் போது, 40 நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கின்றன. இதை, நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் போது 80,000 ரூபாய் வரையில் வருவாய் கிடைக்கும்.
வைக்கோல் தீவனத்தை உலர்த்தி இருப்பு வைத்தால், தீவன சந்தையில் விற்பனை செய்யும் போது ஏக்கருக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டலாம். அதுவே, மாடு, கன்றுகளை வளர்த்தால், இரட்டிப்பு வருவாய் பார்க்கலாம்.
உதாரணமாக, மாடு, கன்றுகளுக்கு உலர்ந்த வைக்கோலை தீவனமாக அளிக்கும் போது, பால், சாணம் ஆகிய சத்து நிறைந்த பொருட்கள் வழங்குகிறது. மேற்கண்டவற்றை நாம் சந்தையில் வாங்கும் போது, அதிக பணம் செலவழிக்க வேண்டி உள்ளது.
ஆகையால், நெல் பயிரிடும் விவசாயிகள் நெல்லை மட்டும் விற்று வருவாய் ஈட்டாமல், வைக்கோலை பதப்படுத்தி விற்பனை செய்தால், தீவன சந்தையில் அதிக வருவாய் ஈட்டலாம். மேலும், மாடு, கன்றுகளுக்கு தீவனம் வழங்கினால், இரட்டிப்பு வருவாய் ஈட்டலாம்.
இதை, தஞ்சை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனர். நம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளும் பின்பற்றினால், டெல்டா விவசாயிகளுக்கு இணையாக வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பா. இளங்கோவன் 98420 07125.
