PUBLISHED ON : ஜூலை 02, 2025

முருங்கை செடிகளில் இலை தின்னும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தினால் தான் பூக்கள் உதிராமல் காய் மகசூல் கிடைக்கும்.
முருங்கை செடிகளை வாட விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நன்றாக காய்ச்சல் (வாடல்) இருந்தால் தான் செடி நன்கு காய்க்கும். முருங்கை நடவு செய்து செடி இரண்டரை அடி வளர்ந்த பின் செடியின் நுனியை கிள்ள வேண்டும். 20வது கிளைகள் வரும் வரை கொழுந்து கிள்ள வேண்டும். வயலில் தேனீ பெட்டி வைத்தால் அயல் மகரந்தச்சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். மூன்று நாட்கள் புளித்த 100 மில்லி தயிரை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலையில் தெளித்தால் 20 சதவீத மகசூலை அதிகப்படுத்தலாம்.
பெரும்பாலான இடங்களில் முருங்கை பூக்க ஆரம்பித்துள்ளது. அதில் கூட்டுப்புழுக்கள் தாக்கி பூ, இலைகளை தின்று ஒன்றாக சுருட்டி விடுகிறது. வானம் மேகமூட்டமாக இருந்தாலும் மழை பெய்தாலும் செடியில் உள்ள பூக்கள் அனைத்தும் கொட்டி விடும். முருங்கை செடியின் கொத்தில் உள்ள பூக்கள் இப்புழுக்களால் பாதிக்கப்பட்டு பூக்கள் அனைத்தும் ஒன்றாக சுருண்டு பார்ப்பதற்கு நுாலாம் படையில் பூக்கள் ஒன்றாக பின்னியது போலிருக்கும். மேலும் முருங்கை இலையில் இலை தின்னும் புழுக்கள் இலையின் அடிப்புறம் இருந்து மெல்லிய நுாலாம் படை போன்ற அமைப்பை உருவாக்கி பச்சையத்தை உண்ணுவதால் இலைகள் காகிதம் போன்று காணப்படும்.
கட்டுப்படுத்துவது எப்படி: இலை தின்னும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த 3 சதவீத வேப்ப எண்ணெய்யை ஒரு வார இடைவெளியில் காலை நேரத்தில் இலைகள் நனையும் படி தெளிக்க வேண்டும். கரைசலுடன் ஒட்டுபசை அல்லது காதி சோப் கலந்து தெளித்தால் இலைகளில் நன்றாக படிந்து கொள்ளும்.
'பிவேரியா பேசியானா' இயற்கை உயிர் பூச்சிக்கொல்லியை பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும். அல்லது 50 மில்லி வேப்பங்கொட்டை கரைசலை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். முருங்கை இலைகள் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி கருப்பாக மாறினால், 'சூடோமோனஸ்' இயற்கை பூஞ்சாண கொல்லி 100 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
-அருண்ராஜ், மண்ணியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம் தேனிஅலைபேசி: 90423 87853