/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வளம் தரும் வேளாண் காடுகள்: தென்னை, டிம்பர் மரங்களில் படரும் மிளகால் மிளிரும் வருமானம்!
/
வளம் தரும் வேளாண் காடுகள்: தென்னை, டிம்பர் மரங்களில் படரும் மிளகால் மிளிரும் வருமானம்!
வளம் தரும் வேளாண் காடுகள்: தென்னை, டிம்பர் மரங்களில் படரும் மிளகால் மிளிரும் வருமானம்!
வளம் தரும் வேளாண் காடுகள்: தென்னை, டிம்பர் மரங்களில் படரும் மிளகால் மிளிரும் வருமானம்!
PUBLISHED ON : ஜூலை 04, 2025

மண்ணிற்கு வளத்தையும், விவசாயிகளுக்கு வருமானத்தையும் கூட்டுகிறது வேளாண் காடுகள் எனும் மரம் சார்ந்த விவசாய முறை. அந்த வகையில் 'வளம் தரும் வேளாண் காடுகள்' தொடரில் வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வுகளை கேட்போம் வாருங்கள்.
பொள்ளாச்சியை சேர்ந்த தென்னை விவசாயி வள்ளுவன், தென்னையுடன் டிம்பர் மரங்கள், ஜாதிக்காய் மற்றும் மிளகு சாகுபடி செய்து வருகிறார். இவரது பண்ணை கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூரில் உள்ளது. தென்னந்தோப்பாக இருந்த பண்ணை ஈஷாவின் வழிகாட்டுதலின்படி பல பயிர் பல அடுக்கு பண்ணையாக மாற்றப்பட்டு மிளகு சாகுபடியும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த நிலத்தை 2006-ஆம் ஆண்டு வாங்கினேன். இங்கு பிரதான பயிர் தென்னை. ஆரம்பம் முதலே இயற்கை விவசயம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். தொடக்கத்தில் 3 ஆண்டுகள் இயற்கை உரங்கள் பயன்படுத்தியும் மரம் ஒன்றிற்கு 110 காய்களுக்கு மேல் கிடைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டில் ஈஷா குழுவினர் என் நிலத்திற்கே வந்து மண் மற்றும் நீரினை பரிசோதனை செய்து, பல அடுக்கு பல பயிர் முறை குறித்து விளக்கி கூறினர்.
பின் அவர்களின் வழிகாட்டுதலின் படி தென்னைக்கு இடையே பல பயிர்களை பயிரிட்டோம். என்னுடைய பண்ணையில் தென்னைகளுக்கிடையே 24 அடி இடைவெளி உள்ளது, அந்த இடைவெளியில் பல்வேறு மரங்களை நட்டுள்ளோம். அதாவது, நான்கு தென்னைக்கு நடுவில் ஒரு ஜாதிக்காய் மரமும், ஒவ்வொரு தென்னையை சுற்றியும் நான்கு டிம்பர் மரங்களும் நடப்பட்டு உள்ளது. ஏக்கருக்கு 75 தென்னை மரங்களுடன் 300 டிம்பர் மரங்களும் உள்ளதால் 375 மிளகு கொடிகள் நடப்பட்டுள்ளது. பண்ணையில் அதிக எண்ணிக்கையான டிம்பர் மரங்கள் உள்ளதால் அது மிளகு படர உதவியாக உள்ளது.” என்றார்.
குளிர்ச்சியைத் தரும் பல பயிர் பல அடுக்கு மாதிரி
மேலும் தொடர்ந்த அவர், “மரப்பயிர்களும் ஊடுபயிர்களும் பல அடுக்குகளில் உள்ளதால் என் பண்ணையில் மண் வளம் மிகப்பெரிய அளவில் கூடியுள்ளது. இதற்காக அண்மையில் ஐநா நடத்திய ஒரு போட்டியில் நம் பண்ணைக்கு விருதும் கிடைத்துள்ளது.
பல அடுக்குகளில் மரங்கள் இருப்பதால் மிளகு சாகுபடிக்கு ஏற்ற குளிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. மேலடுக்கில் தென்னை மரமும் (நெட்டை ரகம்), அதற்கடுத்த அடுக்கில் மகாகனி மற்றும் கொடைத்தோண்டி மரங்களும், அதற்கடுத்து ஜாதிக்காய், கிளைசிரிடியா, வாழையும் உள்ளது. கீழடுக்கில் கருவேப்பிலை உள்ளன. இத்தகையை சாகுபடி முறையினால் குறைந்த இடத்தில் நிறைய மரங்களை வளர்க்க முடியும், மிளகுக்கு தேவையான குளிர்ச்சியும் கிடைக்கிறது.” என்கிறார்.
மிளகு சாகுபடி
மிளகு சாகுபடி குறித்து நாம் கேட்ட போது, “மரப்பயிர் மற்றும் தென்னை சாகுபடி செய்பவர்களுக்கு மிளகு பயிர் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. கரிமுண்டா மற்றும் பன்னியூர் ரகங்கள் தமிழகத்தின் எந்த பகுதியிலும் சிறப்பாக வளர்க்கூடியவை. மிளகு நன்கு வளர்வதற்கு மிதமான வெப்பமும், ஓரளவு சூரிய ஒளியும் இருப்பது அவசியமாகும். வடிகால் வசதியுள்ள, தண்ணீர் தேங்காத நிலமும், பாசன வசதியும் உள்ள நிலங்களில் மிளகு சாகுபடி செய்யலாம்.
ஏக்கருக்கு குறைந்த பட்சம் 300 - 400 மிளகுச் கொடிகளை பராமரித்தால் நல்ல வருமானம் பெறமுடியும். என்னுடைய பண்ணையில் தென்னை, மகாகனி மற்றும் கொடைத்தோண்டி மரங்களில் ஏக்கருக்கு மொத்தம் 375 படரவிடப் பட்டுள்ளோம். தற்போது பண்ணையில் மொத்தம் 2,500 மிளகுக்கொடிகள் உள்ளன.
மிளகு சமவெளிப் பகுதிகளில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பூவெடுக்கும், எந்த அளவு சூரிய ஒளி கிடைக்கிறதோ அந்த அளவிற்கு காய்கள் காய்க்கும். ஜூன், ஜூலை மாதங்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகும். நடவு செய்த 3-து ஆண்டில் இருந்து மகசூல் கிடைக்கும், தொடக்கத்தில் ஒரு கொடிக்கு 1 கிலோ அறுவடை கிடைக்கும். 10 முதல் 12 வருடம் முதிர்ந்த ஒரு கொடியில் இருந்து 10 கிலோ வரை மகசூல் கிடைக்கும். தற்போது ஒரு கிலோ மிளகுக்கு 700 முதல் 1000 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.” என்றார்.
மரம் சார்ந்த விவசாயம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மானிய விலையில் மரக்கன்றுகளுக்கு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தினை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.