PUBLISHED ON : ஏப் 16, 2025

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மழைநீருக்காக வானத்தை பார்த்து ஏங்கும் பூமி கிளங்காட்டூர் கிராமம். கால்வாய் பாசனம் கிடைக்காத நிலையில் நிலத்தில் மழைநீர் குட்டை அமைத்து விவசாயம் செய்கிறார் விவசாயி துபாய் காந்தி.
நாட்டார் கால்வாய் பாசன சங்கத் தலைவராக இருக்கும் துபாய் காந்தி, தன் கிராமம் தண்ணீருக்காக கடந்து வந்து பாதையை விவரித்தார்.
பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் சென்னையில் படித்து துபாயில் 25 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அவ்வப்போது சொந்த ஊருக்கு வரும் போது விவசாயத்திற்கான சிறிய முயற்சிகளை செய்து வந்தேன். கிளங்காட்டூர் பகுதியில் செங்கல் சேம்பர் தொழிற்சாலை நடத்தி வந்தாலும் விவசாயத்தின் மீது தீராக்காதல் எனக்கு. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் கிளங்காட்டூர், ஏ.நெடுங்குளம், அன்னவாசல்,புதுார்,எம். கரிசல்குளம், மானங்கத்தான், புலிக்குளம் உள்ளிட்ட 16 கிராம கண்மாய்கள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன் வைகையாற்றில் இருந்து நாட்டார் கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைத்து பாசனம் செய்து வந்தோம்.
நீர்வளத்துறையினர் கால்வாயை துார்வாரி பராமரிக்காததால் வைகையாற்றுத்தண்ணீர் நின்று போனது. பாசனத்தை நம்பியிருந்த கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் வேறு வேலைகளுக்கு மாறினர். ஏராளமான விவசாயிகள் வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றனர்.
இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றதைத் தொடர்ந்து கிராம மக்களும் காலி செய்து வருகின்றனர். 16 கிராம மக்களின் தொடர் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்த்தது.
கடந்தாண்டு ரூ.9.67 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிந்து கடந்தாண்டு வெள்ளோட்டம் நடந்தது. இந்தாண்டு வைகையாற்றுத் தண்ணீர் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும்.
என் வழி தனி வழி
16 கிராம கண்மாய்கள் மூலம் மற்றவர்கள் பாசனம் பெறுவார்கள் என்றாலும் என் நிலத்திற்கு பாசனத்தண்ணீர் கிடைக்காது, போர்வெல் அமைத்தும் பயனில்லை என்பதால் நிலத்தில் மழைநீர் குட்டை அமைக்க முடிவெடுத்தேன். துபாயில் பாலைவனத்தில் சாக்கடை நீரை சுத்திகரித்து தான் விவசாயம் செய்கின்றனர். அந்த அனுபவம் எனக்கு கை கொடுத்தது. 15 ஏக்கர் நிலத்தின் நடுவே ஒன்றரை ஏக்கர் பரப்பளவிற்கு மழைநீர் பண்ணை குட்டை வெட்டினேன்.
ஆடு மாடுகள் உள்ளே விழாத வகையில் குட்டையை அடுத்து ஒரு ஏக்கர் பரப்பளவில் அகழி வெட்டினேன். பருவத்தில் 5 மழை கிடைத்தால் போதும், என் காட்டு தண்ணீரும் சுற்றியுள்ள காடுகளின் தண்ணீரும் சேர்ந்து குட்டையை நிரப்பி விடும். இங்கு தண்ணீர் மட்டும் பிரச்னையில்லை, மண்ணும் உவர் மண் போன்று தான் இருக்கும்.
சீசனுக்கு ஏற்ப 1000 மாடுகள் அல்லது 1000 செம்மறியாடுகளை நிலத்தில் கிடைபோட வைத்து அவற்றின் சாணத்தை நிலத்திற்கு உரமாக அளிக்கிறேன். மழைத்தண்ணீரை மட்டுமே நம்பி ஒரு போகம் நெல் சாகுபடி, அடுத்து சிறு, குறுந்தானிய சாகுபடி, கோடையில் கத்தரி என காய்கறி சாகுபடி செய்கிறேன்.
மழையின் மாயாஜாலம்
பண்ணை குட்டையில் கட்லா, ரோகு, மிர்கால், ஜிலேபி என உள்ளூர் மீன் குஞ்சுகளை அவ்வப்போது விடுவேன். அவை வளர்ந்தபின் நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் எங்களுக்குமாக பயன்படுத்திக் கொள்வேன்.
இப்போது விரால் மீன்கள் இயற்கையாகவே வளர்வது ஆச்சரியமாக உள்ளது. நான் மட்டும் பண்ணை குட்டை அமைத்து வெற்றி பெற்றால் போதாது. விவசாயிகள் ஒவ்வொருவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக நிறைய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன் என்றார்.
இவரிடம் பேச 96290 38404.