/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மார் 26, 2025 05:51 AM

ராம்நகர்: பிடதி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி ரயில் நிலையத்தில், காலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் பரபரப்பு நிலவும்.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்' என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார். இதை கேட்ட அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். நேற்று அதிகாலையில் ரயில்வே போலீசார், வெடிகுண்டு தடுப்புப் படையினர், பிடதி போலீசார் அடங்கிய குழுவினர், ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு தடுப்புப் படையினர், ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவாளங்கள், குப்பை தொட்டிகள், தண்ணீர் குழாய்கள், இருக்கைகள் என மொத்த ரயில் நிலையத்திலும் சோதனை செய்தனர்.
மாவட்ட துணை எஸ்.பி.,யும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனையால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மிரட்டல் வெறும் புரளி என்றும், மிரட்டல் விடுத்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு பிடதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்ட நிலையில், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு நிலவுகிறது.