/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சி' பிரிவு கோவில்கள் சீரமைப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி
/
'சி' பிரிவு கோவில்கள் சீரமைப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி
'சி' பிரிவு கோவில்கள் சீரமைப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி
'சி' பிரிவு கோவில்கள் சீரமைப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி உறுதி
ADDED : அக் 12, 2025 10:13 PM

பெங்களூரு : கர்நாடகாவின் 'சி' பிரிவு கோவில்களை சீரமைக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நன்கொடையாளர்களிடம் நிதியுதவி பெற, முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வருவாய் குறைவாக உள்ள மாநிலத்தின் 'சி' பிரிவு கோவில்களை சீரமைத்து, பாதுகாக்க அரசு திட்டமிட்டுள்ளது, பத்து பேர் அமர்ந்து ஆலோசித்தால் மட்டுமே, அர்த்தமுள்ள தீர்வு கிடைக்கும். எனவே தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கலந்தாலோசித்து கோவில்களின் மேம்பாட்டுக்கு, திட்டம் வகுப்பர்.
'சி' பிரிவின், அனைத்து கோவில்களும், பிரச்னையில் சிக்கியுள்ளதாக கூற முடியாது. சில இடங்களில் ஊர் மக்களே, கோவில்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். சில இடங்களில் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண்பது, அரசின் நோக்கமாகும்.
மாநிலத்தில் 40,000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் உள்ளனர். இவர்களில் பல குடும்பத்தினர் பணம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், சிகிச்சை பெறும் வசதி இல்லை. எனவே அர்ச்சகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் குடியிருப்பு, இன்சூரன்ஸ் வசதி செய்ய அனுமதிக்கும் மசோதாவை கொண்டு வந்துள்ளோம். இம்மசோதாவுக்கு பா.ஜ.,வினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது தெரியவில்லை. தற்போது மசோதா, ஜனாதிபதி கையெழுத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொப்பால், துமகூரு, சித்ரதுர்கா, மைசூரு பகுதியில் ஏராளமான புராதன கோவில்கள் உள்ளன. இவை சீர் குலைந்துள்ளன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், சிறு, சிறு வரலாற்று இடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கின்றனர். அதே போன்று நமது மாநிலத்திலும் இத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, பாதுகாக்க அரசு விரும்புகிறது. இவற்றை பாதுகாப்பும் பொறுப்பு, உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்படும்.
முதற் கட்டமாக 400 ஆண்டுகளுக்கும் மேலான, பழமையான, சிற்பங்கள் நிறைந்துள்ள கோவில்கள் மேம்படுத்தப்படும். 5,000 கோவில்களை அடையாளம் காண, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவில்களின் மேம்பாட்டுக்கு, சமூக பொறுப்பு நிதி பயன்படுத்தப்படும். நன்கொடையாளர்களிடம் உதவி பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

