/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரன்யா ராவ் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு
/
ரன்யா ராவ் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு
ADDED : மார் 26, 2025 07:14 AM

பெங்களூரு : தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கேட்டு நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
கன்னட நடிகை ரன்யா ராவ், 33. துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்தபோது, கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் ரன்யா ராவ் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து பெங்களூரு 64வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஜாமின் கேட்டு ரன்யா மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி ஸ்ரீதர் விசாரித்தார்.
ரன்யா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிரண் ஜவளி, தன் வாதங்களின்போது, 'துபாயில் இருந்து தங்கக் கட்டி கடத்தி வந்ததை என் மனுதாரர் ஒப்புக்கொண்டு உள்ளார். விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது, விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறி உள்ளார். பெண் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
வருவாய் புலனாய்வு பிரிவு வக்கீல் மது ராய் வாதங்களின்போது, 'கடந்த 3ம் தேதி விமான நிலையத்தில் மனுதாரர் பையை சோதனை செய்தபோது, தங்கக் கட்டி எதுவும் கிடைக்கவில்லை.
'அவரை பரிசோதித்தபோது தங்கக் கட்டிகள் சிக்கின. சுங்க சட்டப்பிரிவு 102ன் கீழ் அவரை கைது செய்து விசாரணை நடத்தினோம். விசாரணையின்போது அவருக்கு தேவைப்படும் நேரத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
'துபாயில் இருந்து தங்கக் கட்டி வாங்க ஹவாலா பணம் பயன்படுத்தியதாக மனுதாரர் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.
நேற்றும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மனு மீதான விசாரணை முடிந்ததாக கூறிய நீதிபதி ஸ்ரீதர், தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.