'கீல்' இறக்குமதிக்கு கட்டுப்பாடு மீறினால் 2 ஆண்டு சிறை
'கீல்' இறக்குமதிக்கு கட்டுப்பாடு மீறினால் 2 ஆண்டு சிறை
ADDED : மார் 26, 2025 12:19 AM

புதுடில்லி:தரமற்ற, மலிவான கீல்கள் இறக்குமதியை தடுப்பதுடன், உள்நாட்டில் கீல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, கீல்கள் இறக்குமதிக்கு புதிய தரக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
கதவு அல்லது ஜன்னல்களில் இணைப்பு கருவியாக கீல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவுக்கு சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானில் இருந்து அதிகளவில் கீல்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள 2025, கீல்கள் (தரக்கட்டுப்பாடு) உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
பி.ஐ.எஸ்., முத்திரை இல்லாத கீல்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் வர்த்தகம், தரமற்ற இறக்குமதி ஆகியவற்றை மேற்கொள்ளவோ, இருப்பு வைப்பதற்கோ அனுமதி இல்லை. மேலும், இந்த உத்தரவு, ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் கீல்களுக்கு பொருந்தாது.
கீல்களுக்கான புதிய தரக்கட்டுப்பாடு விதிமுறைகள், 2025, ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனை மீறுவோர் மீது இந்திய தர ஆணையச் சட்டம், 2016ன் கீழ், 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது முதல்முறை குற்றத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறை தவறு செய்வோருக்கு, குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் மற்றும் சரக்கு மதிப்பில் 10 மடங்கு அபராதமாக விதிக்கப்படும்.
கட்டாய தரக்கட்டுப்பாடு விதிமுறைகள், தரமற்ற கீல்கள் இறக்குமதி செய்வதை தடுப்பதோடு, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கை மற்றும் நுகர்வோரின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.