மழை, வெள்ளத்தால் உப்பளங்கள் பாதிப்பு ரூ.200 கோடி வழங்க கோரிக்கை
மழை, வெள்ளத்தால் உப்பளங்கள் பாதிப்பு ரூ.200 கோடி வழங்க கோரிக்கை
ADDED : ஜன 24, 2024 12:21 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான 6 லட்சம் டன் உப்பு, அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் கரைந்து போய்விட்டது. 250 கோடி ரூபாய் மதிப்பிலான உப்பளங்கள் சேதமுற்றுள்ளன.
அவற்றை மீட்டெடுக்க, 200 கோடி ரூபாய் தேவை என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் துவங்கி திருச்செந்துார் வரையிலும் முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி, வேப்பலோடை என, 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன.
உப்பளங்களில், 700 உப்பு உற்பத்தியாளர்கள் தொழில் செய்கின்றனர். 40,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டில் சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, ஜனவரியில் உப்பு உற்பத்திக்கான பணி துவங்கும். மார்ச் மாதம் உப்பு உற்பத்தி துவங்கி, செப்டம்பர் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கும்.
ஆனால், கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த அதிகன மழையால் தாமிரபரணி வெள்ளம், குளங்கள் உடைப்பு போன்றவற்றால் வந்த வெள்ள நீர், உப்பளங்களை அடித்து சென்று விட்டன.
உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 6 லட்சம் டன் உப்பு மழையில் கரைந்து விட்டது. இதன் மதிப்பு, 100 கோடி ரூபாயாகும்.
மேலும் 20,000 ஏக்கர் நிலப்பரப்பிலும் மழை வெள்ளம் புகுந்து நிலத்தை மண் மேடாக்கியதால் 250 கோடி ரூபாய் மதிப்பிலான உப்பளங்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் செயலர் தனபாலன் கூறியதாவது:
உப்பளங்களும், விவசாயம் போல தான். மழை வெள்ளத்தால் குளங்கள் உடைந்து நீர் வந்ததால் உப்பளங்கள் அழிந்துவிட்டன. அவற்றை மீண்டும் சீர் செய்து உப்பு உற்பத்திக்கு கொண்டு வருவதற்கு இன்னும் மூன்று மாதங்களாகும்.
அதற்கு, 200 கோடி ரூபாய் தேவைப்படும். அத்தகைய நிதி, உப்பு உற்பத்தியாளர்களிடம் இல்லை. எனவே மத்திய மாநில அரசுகள் உப்பு உற்பத்தியாளர்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
உப்பளங்கள் திறந்த வெளியில் இருப்பதால் அவற்றுக்கு காப்பீடு செய்ய முடியவில்லை.
துாத்துக்குடி மட்டுமல்லாமல் மரக்காணம், வேதாரண்யம், சென்னை பகுதிகளிலும் கூட இந்த முறை மழை வெள்ளத்தால் உப்பளங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது உடனடியாக வங்கிகள் மூலம் கடன் உதவி கிடைத்தால் மட்டுமே பணிகளை துவங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 40,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும்; அதைவிட அதிக எண்ணிக்கையில் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு தரும் உப்பளத் தொழிலை பாதுகாக்க, அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

