தொழிற்சாலைகளில் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் குறைக்க கோரிக்கை
தொழிற்சாலைகளில் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் குறைக்க கோரிக்கை
ADDED : ஜன 21, 2024 10:42 AM
சென்னை : பகலில் மின் தேவையை பூர்த்தி செய்ய, சூரியசக்தி மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தொழிற்சாலைகளில் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை குறைக்குமாறு, மின் வாரியத்திற்கு, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு சராசரியாக, 30 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது. அதில், தொழிற்சாலைகளின் பங்கு, 35 சதவீதம். காலை, இரவில் தான் மின் பயன்பாடு அதிகம் உள்ளது.
எனவே, காலை, 6:00 மணி முதல், 10:00 வரையும்; மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 வரையும், 'பீக் ஹவர்' எனப்படும் உச்ச மின் தேவை நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, ஏற்கனவே உள்ள மின் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக, 25 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அதை ரத்து செய்யுமாறு, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எனவே, தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழிற்சாலைகளுக்கு, உச்ச நேர மின் கட்டணத்தை, 'ஸ்மார்ட்' மீட்டர்' பொருத்தும் வரை ஒத்தி வைப்பதாக, தமிழக அரசு, 2023 நவம்பரில் அறிவித்தது.
இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை அரசு, மானியமாக வழங்குகிறது. மற்ற ஆலைகளுக்கு உச்ச நேர மின் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
இந்நிலையில், பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணத்தை குறைக்குமாறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து, கடலுார் மாவட்ட சிறு, குறு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் கூறியதாவது:
மத்திய அரசு, மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு மாநில மின் வாரியங்களை அறிவுறுத்தி உள்ளது. எனவே, பகல் நேரங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய, சூரியசக்தி மின்சாரம் அதிகம் வாங்கப்படுகிறது. 1 யூனிட் மின்சார விலை மிகவும் குறைவு.
வரும் ஏப்., முதல், 10 கிலோ வோட் மேல் மின் இணைப்பு பெற்ற தொழிற்சாலைகளில் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணத்தை குறைக்க, மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு ஏற்ப தமிழகத்தில், தொழிற்சாலைகளில் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 20 சதவீத மின் கட்டணத்தை குறைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

