நேரடி விற்பனை துறை வருவாய் ரூ.22,000 கோடி தாண்டியது
நேரடி விற்பனை துறை வருவாய் ரூ.22,000 கோடி தாண்டியது
ADDED : மார் 28, 2025 01:00 AM

புதுடில்லி:'டைரக்ட் மார்க்கெட்டிங்' எனப்படும் நேரடி விற்பனை துறையின் வருவாய் 22,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதுடன், நேரடி விற்பனையாளர்கள் 88 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், ஐ.டி.எஸ்.ஏ., ஆண்டு கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, ஐ.டி.எஸ்.ஏ., எனப்படும் இந்திய நேரடி விற்பனை சங்கம் தெரிவித்துள்ளதாவது:
நிலையான வளர்ச்சியுடன் முன்னேறி வரும் நேரடி விற்பனை துறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 7.15 சதவீதம் கூட்டு வளர்ச்சியுடன், 2019 - 20ம் நிதியாண்டில் 16,800 கோடி ரூபாயில் இருந்து, 2023 - 24ம் நிதியாண்டில் 22,142 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.
மேலும், செயலில் உள்ள நேரடி விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் 2024ம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் 86 லட்சத்தில் இருந்து, 88 லட்சமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெண்களின் எண்ணிக்கை 44 சதவீதமாக உள்ளது. இது, 2023ம் நிதியாண்டில் 37 சதவீதமாக இருந்தது. இது, தொழில் துறையில் பெண் தொழில்முனைவோரின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.