ADDED : ஜன 23, 2024 12:07 AM

துாத்துக்குடி : 'டாக்' என்னும் 'துாத்துக்குடி ஆல்கலி கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ' நிறுவனத்தின் துாத்துக்குடி ஆலை, மழை வெள்ளத்துக்குப் பின், நேற்று முன்தினம் முதல் மீண்டும் செயல்படத் துவங்கியது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, துாத்துக்குடியில் உள்ள இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், கடந்த டிசம்பர் 17ம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும், ஆலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் முழுமையாகச் செயல்படத் துவங்கிஉள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தொழிற்சாலையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்பதையும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்து ஆலை அதன் செயல்பாடுகளை சீராக மீண்டும் துவங்கிஉள்ளது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்” என்று இந் நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த 'ஏ.எம்., இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் துாத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் நிறுவனம், சோடா ஆஷ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

