'பார்தி ஹெக்ஸகாம்' நிறுவனத்தின் 20% பங்குகளை அரசு விற்கிறது
'பார்தி ஹெக்ஸகாம்' நிறுவனத்தின் 20% பங்குகளை அரசு விற்கிறது
ADDED : ஜன 21, 2024 10:43 AM
புதுடில்லி: 'பார்தி ஹெக்ஸகாம்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வுக்கு 'பார்தி ஏர்டெல்' நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியிடம் பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களை பார்தி ஹெக்ஸகாம் தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெலின் துணை நிறுவனம் பார்தி ஹெக்ஸகாம். இந்நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை ஏர்டெல் நிறுவனமும்; மீதமுள்ள 30 சதவீத பங்குகளை டி.சி.ஐ.எல்., என்னும் 'டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா' நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசும் கொண்டுள்ளன.
தற்போது டி.சி.ஐ.எல்., நிறுவனம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள, 10 கோடி பங்குகளை, பங்கு வெளியீட்டின் வாயிலாக விற்பதற்கு, ஏர்டெல் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பங்கின் முகமதிப்பு ஐந்து ரூபாய்.
விற்கப்படவுள்ள பங்குகள், நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 20 சதவீதமாகும். இந்த ஐ.பி.ஓ.,வில் புதிய பங்கு வெளியீடு எதுவும் இல்லை.
பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளதால், திரட்டப்படவுள்ள நிதி, ஹெக்ஸகாம் நிறுவனத்துக்கு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த ஐ.பி.ஓ., செய்தி வெளிவந்ததை தொடர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 3.68 சதவீதம் அதிகரித்து 1,127 ரூபாயாக இருந்தது.

