தங்கம், வெள்ளி துணைபொருட்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு
தங்கம், வெள்ளி துணைபொருட்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு
ADDED : ஜன 23, 2024 10:47 PM

புதுடில்லி: தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான துணை பொருட்கள் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி துணைபொருட்கள் மற்றும் நாணயங்கள் மீதான இறக்குமதி வரியை, ஐந்து சதவீத விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிப்பதன் வாயிலாக, அரசு 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ஏ.ஐ.டி.சி., எனப்படும் இந்த விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிப்பு, ஜனவரி 22 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் அல்லது வெள்ளி துணை பொருட்கள் என்பது, நகைகளை தாங்கிப் பிடிக்கப் பயன்படும் கொக்கி, திருகு, ஹூக், கிளாம்ப் போன்றவை ஆகும்.
வினையூக்கியாக பயன்படும் விலைமதிப்புமிக்க உலோகங்கள் மீதும் 4.35 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
விலைமதிப்பு மிக்க உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு இணையாகக் கொண்டுவரும் நோக்கில், அடிப்படை சுங்க வரியான 10 சதவீதத்துடன் கூடுதலாக ஐந்து சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021--22 பட்ஜெட்டில், விவசாய உள்கட்டமைப்புக்கு நிதியளிக்க சில பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

