ADDED : ஜன 21, 2024 10:46 AM
சென்னை : 'தென்னை நார் கொள்கை - 2024'ஐ செயல்படுத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்திட, கடந்த 4ம் தேதி 'தென்னை நார் கொள்கை - 2024'ஐ, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தென்னை நார் தொழிலில் நிலையான சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய, மதிப்பு கூட்டப்பட்ட நடைமுறைகளை மேம்படுத்த, தென்னை நார் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.
தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், கிடங்குகளை நிறுவுதல், குழும மேம்பாடு ஆகியவை, தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும்.
தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல், மதிப்புக் கூட்டல், ஏற்றுமதி வணிக மேம்பாட்டிற்கான கருத்துப்பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட, பல்வேறு வழிகள் வழியே மேம்படுத்தப்பட்ட போட்டித்தன்மையை, இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது.
ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் வழியே, புதிய தென்னை நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை, விரைவாக மேம்படுத்த, இக் கொள்கை வழிவகுக்கும்.
இக்கொள்கையை செயல் படுத்த அனுமதி அளித்து, தமிழக அரசு சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கை ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.

