'வளம் குன்றா வளர்ச்சி' உற்பத்தி கேந்திரம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்
'வளம் குன்றா வளர்ச்சி' உற்பத்தி கேந்திரம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்
ADDED : ஜன 21, 2024 10:45 AM
திருப்பூர் : தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனாவுக்கு பின், தட்டுத்தடுமாறி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையை அடைந்தன. இருப்பினும், மின் கட்டணம் பல்வேறு பெயர்களில் உயர்த்தப்பட்டது, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறி வருகிறது.
இயற்கை சூழலுக்கு பாதிப்பு இல்லாத உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் திருப்பூர், 'வளம் குன்றா வளர்ச்சி' என்ற கோட்பாட்டில் சென்று கொண்டிருக்கிறது.
சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, மறுசுழற்சி தொழில்நுட்பம், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சாயக்கழிவு தொழில்நுட்பம் என, திருப்பூர் நகரம் முதல் வரிசையில் இருக்கிறது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
பசுமை சார் உற்பத்தியில், திருப்பூர் தொழில்துறை முன்னோடியாக உள்ளது. தமிழக அரசு, திருப்பூரை வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கேந்திரமாக அறிவிக்க வேண்டும்.
அத்துடன், திருப்பூரின் செயல்பாடுகளை, உலகம் அறியச் செய்யும் வகையில், நிதி ஆதாரம் அளித்து உதவ வேண்டும்.
இன்றைய சூழலில், இறக்குமதி நாடுகள், பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கின்றன; சில நாடுகள் கட்டாயமென அறிவித்துள்ளன. இனிவரும் நாட்களில், பசுமை சார் உற்பத்தி சான்றிதழ் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே ஏற்றுமதியில் முன்னேற முடியும்.
எனவே, திருப்பூரை 'வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கேந்திரம்' என்று அறிவித்து, பின்னலாடை தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க, தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

