புதுமையாளர், 'ஸ்டார்ட் அப்'களுக்கு 'சிப்காட்' ரூ.40 லட்சம் நிதியுதவி
புதுமையாளர், 'ஸ்டார்ட் அப்'களுக்கு 'சிப்காட்' ரூ.40 லட்சம் நிதியுதவி
ADDED : ஜன 08, 2025 02:16 AM

சென்னை:'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் யோசனை வைத்திருக்கும் புதுமையாளர்களுக்கு, 'சிப்காட்' நிறுவனம் நிதியுதவி வழங்க உள்ளது.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் உள்ளன. அவற்றில், பல்வேறு நிறுவனங்களின் ஆலைகள் செயல்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் பூங்காக்களில், சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் உள்ளன. அங்கு கூட்டாக பணிபுரியும் இடவசதி, தயாரிப்பு மேம்பாட்டு மையம், 'புரோட்டோ டைப்பிங்' எனப்படும் முன்மாதிரி பயிற்சி மையம் ஆகிய வசதிகள் உள்ளன.
இவற்றை புதுமையாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது சிப்காட், தொழில்துறை கண்டுபிடிப்பு மானிய திட்டத்தின் கீழ், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், புதுமையாளர்களுக்கு நிதி உதவி செய்ய உள்ளது.இந்த நிதி உதவி தேவைப்படும் சிப்காட் இணையதளத்தில் உள்ள முகவரிக்கு தங்களின் கருத்துருவை வரும் ஜன., 11க்குள் அனுப்ப
வேண்டும்.சிறந்த நிறுவனங்களை, சிப்காட் நிபுணர் குழு தேர்வு செய்து நிதியுதவி வழங்கும்.
உற்பத்தி நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வரை நிதியுதவி
சந்தை வாய்ப்பு நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, தலா ரூ.20 லட்சம் வரை நிதியுதவி
வளர்ச்சி நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, தலா ரூ.40 லட்சம் வரை நிதியுதவி

