'ஸ்டார்ட் அப்'களுக்கு சலுகை கிடைக்க 'ஸ்மார்ட் கார்டு'
'ஸ்டார்ட் அப்'களுக்கு சலுகை கிடைக்க 'ஸ்மார்ட் கார்டு'
ADDED : ஜன 23, 2024 10:56 PM

சென்னை: தமிழக அரசு, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, அரசு அனுமதிகளுக்கான பதிவு கட்டணம் உள்ளிட்டவை சலுகை விலையில் கிடைக்க, 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு நிறுவனத்தை துவக்க வேண்டும் எனில், அதற்கான இணையதளம் உருவாக்க வேண்டும். இதை, மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டும். அதற்கு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும். வரி தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்காக, தொழில் நிறுவனங்கள் பல்வேறு சேவை நிறுவனங்களை அணுகின்றன. அவை, ஒவ்வொரு சேவைக்கும், தனித்தனியே அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்த செலவுகளை, புதிதாக துவங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை.
எனவே, அந்நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சேவை வழங்கும் நிறுவனங்களுடன், 'ஸ்டார்ட் அப் டி.என்' பேச்சு நடத்தி, சலுகை விலை கிடைக்க வழிவகை செய்யும். ஸ்மார்ட் கார்டில், சேவை வழங்கும் நிறுவனங்களின் விபரம், சலுகை விலைகள் தொடர்பான தகவல்கள் இடம்பெறும்.
அந்த கார்டை பயன்படுத்தி சலுகை விலையில் சேவை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

