மின்வாகன பேட்டரி தயாரிப்பு: தமிழகம் - ஆஸ்திரேலியா ஒப்பந்தம்
மின்வாகன பேட்டரி தயாரிப்பு: தமிழகம் - ஆஸ்திரேலியா ஒப்பந்தம்
ADDED : ஜன 26, 2024 02:24 AM

சென்னை: ஆஸ்திரேலியா - இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும் போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை அமைச்சருமான ரீட்டா சாபியோட்டி, இந்தியா வந்துள்ளார்.
அவர் புதுடில்லியில் வர்த்தக ஒருங்கிணைப்புகளில் கையெழுத்திட்டதுடன், தற்போது தமிழகத் தொழில்துறையினர் சந்திப்புகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று, தமிழகத்தின் 'ஹில்ட் எனர்ஜி' மற்றும் ஆஸ்திரேலியாவின் 'தோரியான்' ஆகிய நிறுவனங்களுக்கிடையில், மின்சார வாகனங்களின் பேட்டரிகளை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதை, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜனும், மேற்கு ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரீட்டா சாபியோட்டியும் கூட்டாக அறிவித்தனர்.
அதன்பின், ரீட்டா சாபியோட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவு உள்ளது. ஆஸ்திரேலியாவில் 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் நேரடி விமான போக்குவரத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

