ஊராட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த வரி வருவாயை பெருக்க வேண்டும்
ஊராட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த வரி வருவாயை பெருக்க வேண்டும்
ADDED : ஜன 26, 2024 02:14 AM

மும்பை:ஊராட்சிகள் தங்கள் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாய் வளங்களை பெருக்கவும், அவற்றின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
'ஊராட்சி நிர்வாகங்களின் நிதிகள்' எனும் தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஊராட்சிகளுக்கான நிதிகள் சொத்து வரி, கட்டணம் மற்றும் அபராதம் ஆகியவற்றில் இருந்து குறைந்த சொந்த வருவாயைக் கொண்டிருப்பதால், கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. ஏறக்குறைய இவர்களின் அனைத்து வருவாய்களும் அரசு மானியங்கள் வாயிலாக பெறப்படுகின்றன.
நிலையான வளர்ச்சிக்கு, ஊராட்சி நிர்வாகங்கள் தங்களது சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களை பெருக்குவதுடன், தங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சியில் ஊராட்சி நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 2020 - 21 முதல் 2022 - 23 வரையிலான காலகட்டத்தில், 2.58 லட்சம் ஊராட்சிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் மதிப்பீட்டில், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் நிதி மற்றும் பங்களிப்பு பற்றி தெரிவிக்கின்றன.
இதில் ஊராட்சி நிர்வாகங்களின் வருவாய் மற்றும் செலவுகள் குறித்த தரவுகள் சமச்சீரற்ற முறையில் கிடைப்பதால், ஊராட்சி நிர்வாகங்களின் நிதி ஆரோக்கியம் குறித்த மதிப்பீடு சவாலானதாகவே உள்ளது.
மாநில நிதி ஆணையங்களை உடனடியாக அமைப்பது தற்போது ஏற்படும் கணிசமான காலதாமதங்களை தவிர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய நிதி ஆணையத்தின் பணிகளுக்கு நிகரான செயல்பாடுகளை கொண்ட மாநில நிதி ஆணையங்கள், ஊராட்சி நிர்வாகங்களின் நிதிநிலையை பலப்படுத்துவதுடன், கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக, தங்கள் பொறுப்புகளை சிறப்பாக வழங்க உதவலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

