விமான ஓடுபாதைகளை பயன்படுத்த அனுமதி கோரி காத்திருக்கும் டிட்கோ
விமான ஓடுபாதைகளை பயன்படுத்த அனுமதி கோரி காத்திருக்கும் டிட்கோ
ADDED : மார் 25, 2025 11:16 PM

சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டையில் விமான சோதனை மையம், திருவள்ளூர் சோழவரத்தில், 'ட்ரோன்' சோதனை மையம் ஆகியவற்றை அமைக்க உள்ளது 'டிட்கோ' நிறுவனம்.
இவற்றுக்கு அருகில் உள்ள விமான ஓடுபாதையை பயன்படுத்த, ராணுவ அமைச்சகத்தின் அனுமதியை, இரு ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.
விமான சோதனை மையத்திற்கு, விமான படையின் கட்டுப்பாட்டில் உள்ள உளுந்துார்பேட்டை விமான ஓடுபாதையையும், சோழவரத்தில் ட்ரோன் ஆய்வு மையத்திற்கு, சோழவரத்தில் உள்ள விமான ஓடுபாதையையும் பயன்படுத்த டிட்கோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, இரு ஆண்டுகளுக்கு முன், ராணுவ அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டது.
இதுவரை அனுமதி கிடைக்காததால், ஆய்வு மையங்களை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சோழவரம், உளுந்துார்பேட்டை விமான ஓடுபாதைக்கு மட்டுமின்றி; சூலுார் விமான ஓடுபாதையை பயன்படுத்திக் கொள்ளவும் ராணுவ அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டது.
சூலுார் விமான ஓடுபாதையை, கோவை வாரப்பட்டி பாதுகாப்பு உபகரணங்கள் பூங்கா மற்றும் சூலுார் வான்வெளி தொழில் பூங்கா ஆகியவற்றில் தொழில் துவங்கும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக அனுமதி கோரப்பட்டது.
இரு ஆண்டுகளாக அனுமதி கிடைக்காததால், சோதனை மையங்கள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அனுமதி பெறும் முயற்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.