ADDED : ஜன 23, 2024 12:04 AM

புதுடில்லி : ஜப்பானை சேர்ந்த சோனி குழுமத்தின் 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா' நிறுவனம், 'ஜீ என்டர்டெய்ன்மென்ட் என்டர்பிரைசஸ்' நிறுவனத்துடனான 83,000 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
அத்துடன் ஒப்பந்த நிபந்தனைகளை மீறியதாக கூறி, கிட்டத்தட்ட 748 கோடி ரூபாய் இழப்பீடும் கோரியுள்ளது.
சோனி பிக்சர்ஸ் தற்போது 'கல்வர் மாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, இந்நிறுவனம் ஜீ நிறுவனத்துடன், இரண்டாண்டு காலக்கெடுவுடன் கூடிய இணைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக சோனி அறிவித்துள்ளது.
தங்கள் மீதான சோனியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜீ நிறுவனம், இணைப்புக்கான அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், சோனி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துஉள்ளது.

