
தங்கம் -
சிறிய சரிவுகள் ஏற்படலாம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3,600 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. பலவீனமான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி குறைப்புக்கான எதிர்பார்ப்புகள் காரணமாக, விலை ஏறியுள்ளது. மத்திய வங்கிகளின் அதிக கொள்முதல், இ.டி.எப்., முதலீடுகள் ஆகியவை விலை உயர்வுக்கு சாதகாமாக இருக்கின்றன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் சர்வேத சந்தையில் தங்கம் விலை உயர்வு, சந்தையில் ஆபரண தங்கம் கிராம் பத்தாயிரத்தை தாண்டி வர்த்தகமாகி வருவதற்கு காரணமாகியுள்ளது.
அமெரிக்க பணவீக்கம் பற்றிய புதிய தரவுகள் வெளிவரவுள்ளதால், முதலீட்டாளர்கள் காத்திருக்கிறார்கள். மத்திய கிழக்கு பதற்றங்கள் மற்றும் டிரம்ப் அறிவித்த சுங்க வரி அச்சுறுத்தல்கள், தங்கத்தின் தேவையை மேலும் உயர்த்தியுள்ளன.
செப்டம்பர் 17 போம்சி கூட்டத்திற்கு முன் சில சிறிய சரிவுகள் ஏற்படலாம். ஆனால் அரசியல் பதற்றம் மற்றும் வட்டி கொள்கை அபாயங்கள் விலைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.
கச்சா எண்ணெய்
கவனம் ஈர்க்கும் கையிருப்பு
கச்சா எண்ணெய் விலை, வாரத்தின் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு 65 டாலருக்கு கீழே உள்ளது. சீனாவின் கையிருப்பு சேமிப்பு மற்றும் உலக அரசியல் பதற்றங்களால், விலை மீண்டிருந்தாலும், தற்போது அதிகரித்த கையிருப்புகள், கவனத்தை ஈர்த்துள்ளன.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் தகவல் படி, உலகளாவிய கையிருப்புகள் இந்த ஆண்டு தினசரி 8 லட்சம் பீப்பாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும்; இது அதிக தேவைக்காலத்தில் வழக்கத்திற்கு மாறானது என்றும் தெரிவித்துள்ளது, ஓபெக்பிளஸ் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புக்கொண்டிருந்தாலும், உண்மையான உற்பத்தி அதிகரிப்பு தாமதமாகலாம். இதனால் சந்தை, அதிக சப்ளை அபாயம் மற்றும் அரசியல் ஆதரவுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறது.
சீனாவின் அதிகமான கச்சா எண்ணெய் கொள்முதல், விலைக்கு முக்கிய ஆதரவாக உள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான சீனா, இந்த ஆண்டு தீவிரமாக கையிருப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தினமும் கிட்டத்தட்ட 5.3 லட்சம் பீப்பாய் எண்ணெய்யை கையிருப்பில் சேர்த்து, மொத்த கையிருப்பை கிட்டத்தட்ட 14 லட்சம் பீப்பாய் எனும் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத உச்ச நிலைக்கு உயர்த்தியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.